எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து விசிகவினர் பேசக்கூடாது – நிர்வாகிகளுக்கு திருமாவளவன் அறிவுறுத்தல்..
VCK Leader Thirumavalavan: ஆணவப்படுகொலைக்கு எதிராக தனி சட்ட இயற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் யாரும் அதிமுக முன்னாள் தலைவர்கள் அல்லது எடப்பாடி பழனிசாமி குறித்து பேசக்கூடாது என அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஆகஸ்ட் 11, 2025: விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலைவர் திருமாவளவன் அக்கட்சி தொண்டர்களுக்கு எம்ஜிஆர் குறித்தோ, ஜெயலலிதாவை குறித்தோ எதுவும் பேசக்கூடாது என அறிவுறுத்தி உள்ளார். மேலும் நம்முடைய கருப்பொருளை மீறி வேறு எதுவும் பேசக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தரப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மற்ற மாவட்ட தலைநகரங்களில் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 11 2025 தேதியான இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் ஜெயலலிதா குறுத்து பேசிய திருமாவளவன்:
கலைஞர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “ தமிழ்நாட்டு அரசியலில் கருணாநிதி எதிர்ப்பு என்பது மைய அரசியலாக சுழன்று வருகிறது. ஆட்சி அதிகார பீடத்தில் அமர்ந்து கொண்டு பெரியார் கருத்துக்களை அவர் பேசினார். எம்ஜிஆர் ஜெயலலிதாவை யாரும் விமர்சிப்பது கிடையாது. திராவிட எதிர்ப்பு என்றாலே அது கருணாநிதி எதிர்ப்பு தான்” என குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது இதற்கு அதிமுக தரப்பில் பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர் குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இந்த கருத்தினை திருமாவளவன் திரும்பிப் பெற வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
Also Read: இலங்கை கடற்படை அட்டூழியத்திற்கு எதிர்ப்பு.. இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்!
திருமா விளக்கம்:
இதற்கு பதில் அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் தனக்கு இல்லை என குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக பேசிய அவர், “ தமிழ்நாடு அரசியல் கடந்து 60 ஆண்டுகளாக எவ்வாறு இயங்கி வருகிறது. அது எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்ற முறையில் எம்ஜிஆர் பற்றியும் குறிப்பிட்டேன். எம்ஜிஆர் மீதும் ஜெயலலிதா மீதும் எனக்கு அதீதமான மதிப்பு உண்டு.
Also Read: கிருஷ்ணகிரியில் மக்களை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி.. 3 ஆம் கட்ட பிரச்சார பயணத்திட்டம் என்ன?
அவர்களை பலமுறை மனம் திறந்து பாராட்டி உள்ளேன். தமிழ்நாடு அரசியல் கலைஞர் கருணாநிதியை மையப்படுத்தி எப்படி கலைஞர் எதிர்ப்பு அரசியலாக மாறியது என நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசி இருந்தேன். எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு எப்போதும் இருந்தது இல்லை என தெளிவுப்படுத்தியிருந்தார்.
விசிக தொண்டர்களுக்கு திருமா அட்வைஸ்:
இந்த நிலையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு மாவட்ட தலைநகரில் ஆணவக் கொலை தடுத்து நிறுத்த வேண்டும், ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் ஆர்ப்பாட்டமானது நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி யாரும் ஜெயலலிதாவை பற்றியோ அல்லது எம்ஜிஆர் பற்றியோ பேசக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.மேலும், “ இது என் மீது வைக்கப்பட்ட விமர்சனம் இதற்கு நான் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். எனவே கட்சியினர் யாரும் இது குறித்து பேசக்கூடாது.
எம்ஜிஆர் ஜெயலலிதாவை நான் அவமதிக்கும் வகையில் பேசி விட்டேன் என்ற கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். அதற்கு எதிர்வினை ஆற்றுகிறோம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் முன்னாள் தலைவர்களுக்கு பதில் சொல்கிறோம் என்று எதையும் பேசக்கூடாது” என தெளிவாக குறிப்பிட்டு கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்