தமிழக சட்டப்பேரவை கடைசி நாள்.. கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல்..
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று, செப்டம்பர் 8ஆம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த அறிக்கையில் கள்ளக்குறிச்சியில் உண்மையில் நடந்தது என்ன, சம்பவத்துக்கான காரணங்கள் என்ன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அடங்கி இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 8, 2026: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு கள்ளச்சாராயம் குடித்ததில் 63 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்திருந்ததே உயிரிழப்புகளுக்கு காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையம் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டு, தனது இறுதி அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
மேலும் படிக்க: முதல்வர் விஜய்யின் ஆவேச பேச்சு.. உதயநிதி ஸ்டாலின் இன்ஸ்டாவில் பகிர்ந்த “சுறா” படத்தின் காமெடி காட்சி வைரல்!
விசாரணை ஆணையத்தின் அறிக்கை தாக்கல்:
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று, செப்டம்பர் 8ஆம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த அறிக்கையில் கள்ளக்குறிச்சியில் உண்மையில் நடந்தது என்ன, சம்பவத்துக்கான காரணங்கள் என்ன, அதிகாரிகளின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தன, இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவை:
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 18ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் கூட்டத்தொடரில், ஆகஸ்ட் 5ஆம் தேதி பொது பட்ஜெட்டும், ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் துறைக்கான பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. பின்னர் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது.
மேலும் படிக்க: 6 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்.. எத்தனை மாவட்டங்களில் மழை இருக்கும்? வானிலை ரிப்போர்ட்..
இதனிடையே, செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்கிப் பேசினார். அப்போது திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை தொடர்பான சில விவரங்களையும் சட்டப்பேரவையில் வாசித்தார். முதலமைச்சரின் இந்தப் பேச்சு எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், திமுக தரப்பிலும் பல்வேறு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில், சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.