குடும்ப அட்டை உறுப்பினர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு.. பயோமெட்ரிக் வைக்க ஆகஸ்ட் 8,9 சிறப்பு முகாம்.. மிஸ் பண்ணாதீங்க..!
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், 2013-இன் படி, முன்னுரிமை மற்றும் அந்த்யோதய அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்க்க, மின்னணு குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து உறுப்பினர்களின் விரல் ரேகை அடிப்படையிலான e-KYC சரிபார்ப்பு கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 5, 2026: தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வருகிற ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்களில் விரல் ரேகை மற்றும் கருவிழி (பயோமெட்ரிக்) சரிபார்ப்புக்கான சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கைரேகை பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள ரேஷன் அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டை பயனாளர்கள்:
ரேஷன் அட்டை என்பது உணவுப் பொருட்களை பெறுவதற்கான ஆவணமாக மட்டுமல்லாமல், அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கான முக்கிய ஆவணமாகவும் கருதப்படுகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மாநிலத்தில் 2 கோடியே 28 லட்சத்து 12 ஆயிரத்து 942 குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்த ரேஷன் அட்டைகள் மூலம் மாதந்தோறும் இலவச அரிசி, பச்சரிசி, சர்க்கரை, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும், வெள்ளம், மழை போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் வழங்கப்படும் நிவாரண உதவிகளுக்கும், மகளிர் உரிமைத்தொகை போன்ற அரசுத் திட்டங்களுக்கும் ரேஷன் அட்டை முக்கிய அடிப்படையாக பயன்படுத்தப்படுகிறது.
தற்போது தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைக்காக பலர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில், 75 ஆயிரம் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 8, 9 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்:
இருப்பினும், பல குடும்ப அட்டைதாரர்கள் இதுவரை பயோமெட்ரிக் பதிவு செய்யவில்லை. இதனை முழுமையாக நிறைவு செய்வதற்காகவே சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், 2013-இன் படி, முன்னுரிமை மற்றும் அந்த்யோதய அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்க்க, மின்னணு குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து உறுப்பினர்களின் விரல் ரேகை அடிப்படையிலான e-KYC சரிபார்ப்பு கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, குடும்ப உறுப்பினர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் 2023 அக்டோபர் மாதம் முதல் விரல் ரேகை சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 95.6 சதவீதம் e-KYC பதிவு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “நாடாளுமன்றத்தில் வைகோ” நூல் வெளியீட்டு விழா.. டெல்லியில் ஒன்றுதிரண்ட ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள்!!
இந்த பதிவை 100 சதவீதம் நிறைவு செய்வதற்காக ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும்.
எனவே, இதுவரை கைரேகை பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள், தங்களது அருகிலுள்ள நியாயவிலைக் கடையில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்று e-KYC பதிவை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.