கைது முதல் விடுதலை வரை.. ஒரே நாளில் அரங்கேறிய பரபரப்புகள்.. உதயநிதி ஸ்டாலின் வழக்கின் முழு பின்னணி!
Udhayanidhi Stalin Arrest to Release: தஞ்சாவூர் ஆர்ப்பாட்டப் பேச்சைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி காலையிலேயே கைது செய்யப்பட்டு, 8 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து 10 மணி நேர அலைக்கழிப்புக்குப் பின் காவல் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தஞ்சாவூர், ஆகஸ்ட் 05: முதலமைச்சர் மற்றும் பெண்கள் குறித்து அவதறாகப் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காலையில் சென்னையில் வைத்துக் தஞ்சாவூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் நடைபெற்ற தீவிர விசாரணை மற்றும் தொடர் பரபரப்புகளுக்கு இடையே, மாலை வேளையில் அவர் காவல் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மேலும் படிக்க: “தாத்தாவின் சொத்துக்குப் பேரன் உரிமை கொண்டாடலாம்… தமிழ்நாட்டிற்கு அல்ல!”.. உதயநிதியை விமர்சித்த அமைச்சர் செங்கோட்டையன்!!
9 பிரிவுகளில் வழக்கு:
தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமைப் போராட்டப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் ஒரு பிரபல நடிகை குறித்து அவதூறாகவும் நாகரீகமற்றும் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது பாரதிய நியாய சன்ஹிதா, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழ் மொத்தம் 9 கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
காலை 10.50-க்கே கைது:
காலை 10:50 மணியளவில் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, தஞ்சை மாவட்ட எஸ்பி தலைமையிலான தனிப்படையினர் உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்தனர். தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்ததால், காவல்துறையினரின் வாகனத்தில் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார். வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் திரண்டு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
பாதை மாற்றம்:
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரைக் கடந்ததும் அரியலூர் வழியாகத் தஞ்சாவூருக்கு 1 மணி நேரத்தில் செல்ல முடியும். இருப்பினும், திமுகவினரின் எதிர்ப்பைக் கண்டு அந்த வழியைத் தவிர்த்துத் திருச்சி வழியாக காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையம் மாற்றம்:
தஞ்சாவூரில் நிலவிய உச்சகட்ட அரசியல் பதற்றம் மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் நகருக்குள் அழைத்துச் செல்லப்படாமல், தஞ்சை மாவட்ட எல்லையில் உள்ள செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். காவல் நிலையத்தின் முதல் தளத்தில் வைத்து அவரிடம் இந்த வழக்கு தொடர்பாகக் காவல்துறையினர் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். சுமார் ஒன்றரை மணி நேரம் தீவிர விசாரணை நடைபெற்றது.
குவிக்கப்பட்ட பலத்த பாதுகாப்பு:
விசாரணை நடைபெற்ற செங்கிப்பட்டி காவல் நிலையப் பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கக் காவல்துறை சார்பில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 1 ஐஜி, 2 டிஐஜி, 7 எஸ்பிக்கள், 50க்கும் மேற்பட்ட டிஎஸ்பிக்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள்/உதவி ஆய்வாளர்கள் உட்படப் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
திமுக தொண்டர்கள் போராட்டம்:
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டங்கள் வெடித்தன. செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு வெளியேயும் திரண்ட ஏராளமான திமுக தொண்டர்கள், தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் எதிராகத் தொடர் கோஷங்களை எழுப்பி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல் பிணையில் விடுதலை:
ஒன்றரை மணி நேர விசாரணைக்குப் பிறகு, முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட இருவர் வழங்கிய பிணைப் பொறுப்பின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, செங்கிப்பட்டியிலிருந்து சாலை மார்க்கமாகத் திருச்சி விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட உதயநிதி ஸ்டாலின், அங்கிருந்து விமானம் மூலமாகச் சென்னை திரும்பினார். காலையில் தொடங்கிய இந்த பரபரப்பான நிகழ்வுகள் மாலையில் செங்கிப்பட்டி காவல் நிலைய விசாரணையுடன் நிறைவுக்கு வந்தன.
மேலும் படிக்க: சென்னை அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன கணிப்பு..
விடுவிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின், திறந்த வாகனத்தில் சென்று மலர்களைத் தூவியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடிய தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். காலை 11 மணிக்குத் தொடங்கி மாலையில் நிறைவடைந்த இந்த 10 மணி நேர அலைக்கழிப்புச் சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.