“இன்சூரன்ஸ் இல்லையா?.. பெட்ரோல், டீசல் கிடையாது?” மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
No Insurance No Fuel Supreme Court Pilot Project: இந்தியாவில் ஓடும் 56% வாகனங்களுக்கு மூன்றாம் தரப்புக் காப்பீடு இல்லை என்பதால், காப்பீடு இல்லாத வாகனங்களுக்குப் பெட்ரோல், டீசல் வழங்கத் தடை விதிக்கும் முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசுக்கும் IRDAI-க்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி, ஆகஸ்ட் 05: இந்தியச் சாலைகளில் செல்லும் வாகனங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றுக்கு முறையான காப்பீடு இல்லை என்ற அதிர்ச்சி தகவலைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, மூன்றாம் தரப்புக் காப்பீடு (Third-Party Insurance) இல்லாத வாகனங்களுக்குப் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்குவதைத் தடை செய்யும் ‘நோ இன்சூரன்ஸ்.. நோ ஃபியூயல்’ (No Insurance, No Fuel) முன்னோடித் திட்டத்தைச் உடனடியாகச் செயல்படுத்துமாறு மத்திய அரசுக்கும், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க: “நாடாளுமன்றத்தில் வைகோ” நூல் வெளியீட்டு விழா.. டெல்லியில் ஒன்றுதிரண்ட ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள்!!
நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு ‘தேசிய காப்பீட்டு நிறுவனம் vs துங்கலா தனலட்சுமி’ வழக்கின் விசாரணையின் போது இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
16.54 கோடி வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் இல்லை:
2024-25 நிதியாண்டிற்கான நிதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையைச் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்தியாவில் உள்ள மொத்த 30.48 கோடி வாகனங்களில் சுமார் 16.54 கோடி வாகனங்கள் (56%) எந்தவிதமான காப்பீடும் இல்லாமல் சட்டவிரோதமாகச் சாலைகளில் இயங்குவதைக் கண்டு அதிர்ச்சி தெரிவித்தனர்.
“மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 146-ன் கீழ் கட்டாயக் காப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கமே, சாலை விபத்துகளில் பாதிக்கப்படும் நபர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய இழப்பீடு தாமதமின்றி கிடைக்க வேண்டும் என்பதுதான். ஆனால், 56% வாகனங்கள் இன்சூரன்ஸ் இல்லாமல் இயங்குவதால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகள் நீதிமன்றப் போராட்டங்களில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்படுகிறது” என நீதிபதிகள் கவலையுடன் சுட்டிக்காட்டினர்.
பெட்ரோல் பங்குகளில் பரிசோதனை எவ்வாறு செயல்படும்?
பெட்ரோல் பங்குகளில் தானியங்கி எண் பலகை கண்டறியும் (ANPR) கேமராக்கள் பொருத்தப்படும். வாகனம் உள்ளே நுழையும் போதே அதன் பதிவு எண் VAHAN போர்டல் மற்றும் காப்பீட்டுத் தரவுத்தளத்துடன் ஒப்பிடப்படும். இன்சூரன்ஸ் காலாவதியாகியிருந்தால், அந்த வாகனத்திற்குப் பெட்ரோல்/டீசல் வழங்கப் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மறுப்பார்கள். இந்தத் திட்டத்திற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கொள்கை ரீதியாக எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இ-செல்லான் மற்றும் நவீனச் சாதனங்கள்:
நெடுஞ்சாலைகளில் உள்ள ANPR கேமராக்கள் VAHAN தரவுத்தளத்துடன் இணைக்கப்பட்டு, இன்சூரன்ஸ் இல்லாத வாகன உரிமையாளர்களுக்குத் தானாகவே இ-செல்லான் அபராதம் அனுப்பப்படும். போக்குவரத்துக் காவலர்களுக்கு நவீனக் கையடக்கச் சாதனங்கள் அல்லது மொபைல் செயலிகள் வழங்கப்படும். இதன் மூலம் வாகனச் சான்றுகளை நேரடியாகப் பார்க்காமலேயே இன்சூரன்ஸ் நிலையைச் சரிபார்க்க முடியும்.
புதிய வாகனங்களுக்கான கட்டாய இன்சூரன்ஸ் காலம் உயர்வு:
2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, புதிய கார்களுக்கு 3 ஆண்டுகளும், பைக்குகளுக்கு 5 ஆண்டுகளும் மூன்றாம் தரப்புக் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த நடைமுறையை மேலும் ஓராண்டு உயர்த்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இனி 3 ஆண்டுகளுக்குப் பதிலாக 4 ஆண்டுகள் கட்டாய மூன்றாம் தரப்புக் காப்பீடு எடுக்க வேண்டும். இனி 5 ஆண்டுகளுக்குப் பதிலாக 6 ஆண்டுகள் கட்டாய மூன்றாம் தரப்புக் காப்பீடு எடுக்க வேண்டும்.
மேலும் படிக்க: “தாத்தாவின் சொத்துக்குப் பேரன் உரிமை கொண்டாடலாம்… தமிழ்நாட்டிற்கு அல்ல!”.. உதயநிதியை விமர்சித்த அமைச்சர் செங்கோட்டையன்!!
இதற்கான முறையான சுற்றறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு IRDAI அமைப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு விரைவாக இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்யவும், இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களைக் கட்டுப்படுத்தவும் உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கை பயன்படும் எனக் கருதப்படுகிறது.