எதிர்ப்பை மீறி காதல் திருமணம்.. வீட்டின் கதவை உடைத்து கழுத்தில் கத்தி வைத்து பெண்ணை கடத்தி சென்ற பெற்றோர்.. பகீர் சம்பவம்!!
Sivakasi Love Marriage Shocking Incident: சிவகாசியில் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட புதுப்பெண்ணை, வீட்டின் கதவை உடைத்து புகுந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் தாக்குதல் நடத்தி வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரை கத்தியை காட்டி மிரட்டி விட்டு மனைவியை கடத்திச் சென்ற நால்வர் மீது சிவகாசி நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர், அக்.03: தமிழ்நாட்டில் சாதி மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காரணமாகக் காதல் திருமணங்களுக்கு எழும் எதிர்ப்புகளும், அதனால் ஏற்படும் குற்றச் சம்பவங்களும் தொடர்ந்து பெரும் சமூகப் பிரச்சனையாக உருவெடுத்து வருகின்றன. அந்த வகையில், பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறிப் பாதுகாப்பு தேடி வேறு ஊருக்குச் சென்று குடும்பம் நடத்தி வந்த புதுமணத் தம்பதியினர் மீது, பெண்ணின் வீட்டார் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அரங்கேறியுள்ளது. வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, கணவரைக் கத்தியைக் காட்டி உயிருடன் கொன்றுவிடுவதாக மிரட்டிவிட்டு, மனைவியை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: நெல்லையில் சம்பவம்… தென்காசியில் பதுங்கல்.. கத்தியை காட்டி நகை-பணம் வழிப்பறி.. இருவரை தூக்கிய போலீஸ்!
பொருளாதார ஏற்றத்தாழ்வும் காதலும்:
தென்காசி மாவட்டம் சிவகிரி குமாரபுரத்தைச் சேர்ந்த 26 வயதான இசக்கிமுத்து என்பவர், டிப்ளமோ முடித்துவிட்டு எலக்ட்ரிசியனாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சிவகிரி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரும், மளிகைக் கடை நடத்தி வருபவருமான சசிகுமாரின் மகள் கிருத்திகா மகேஸ்வரிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இசக்கிமுத்து உறவுமுறையில் மாமன் மகனாக இருந்தபோதிலும், இரு குடும்பத்தினருக்கும் இடையே நிலவிய பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாகக் கிருத்திகாவின் பெற்றோர் இவர்களது காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த மார்ச் மாதம் இருவரும் சென்னைக்குச் சென்று அங்கிருந்த சிவன் கோயிலில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர்.
தொடர் அச்சுறுத்தல்களும் பாதுகாப்பு தேடலும்:
திருமணம் குறித்துக் கிருத்திகாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தைத் தொடர்ந்து, காவல் துறையினர் புதுமணத் தம்பதியினரை அழைத்து விசாரணை நடத்தினர். அதில் இருவருமே சட்டப்பூர்வமாகத் திருமண வயதை அடைந்தவர்கள் என்பது உறுதியானதால், இரு வீட்டாருக்கும் அறிவுரை கூறி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். ஆனால், கிருத்திகாவின் பெற்றோர் சென்னைக்கே வந்து அவர்களுக்குத் தொடர்ந்து பல்வேறு வழிகளில் தொந்தரவும் மிரட்டலும் கொடுத்து வந்தனர். இதனால் அச்சமடைந்த தம்பதியினர் சிவகாசிக்குத் தப்பிச் சென்று, அங்கிருந்த உறவினர்களின் ஆதரவோடு சிவகாசி முருகன் கோயிலில் மீண்டும் முறைப்படி திருமணம் செய்து கொண்டு, சிவகாசி நகர்ப் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்களுடைய புதிய வாழ்க்கையைத் தொடங்கினர்.
கதவை உடைத்துக் கொடூரத் தாக்குதல்:
சிவகாசியில் தம்பதியினர் இருக்கும் இடத்தை அறிந்துகொண்ட கிருத்திகாவின் தந்தை சசிகுமார், தாயார் மகாலட்சுமி மற்றும் உறவினர்கள் சம்பவத்தன்று ஆட்களுடன் அங்கு வந்து வீட்டின் கதவை வலுக்கட்டாயமாக உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் கணவர் இசக்கிமுத்துவின் முகத்தைத் துணியால் மூடி, கயிற்றால் இறுக்கிக் கட்டிப் போட்ட கும்பல், அவரது கழுத்தில் கத்தியை வைத்து அமுக்கி கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளது. பின்னர், கிருத்திகாவைக் கொடூரமாகத் தாக்கி, அவரது அலறல் சத்தத்தையும் பொருட்படுத்தாமல் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வெளியில் தயாராக நின்ற காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். அத்துடன் இசக்கிமுத்துவின் செல்போன் மற்றும் அவர்களின் திருமணச் சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும் அந்த கும்பல் பறித்துச் சென்றது.
இதையும் படிக்க: எட்டயபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது பாய்ந்த ஆம்னி பேருந்து.. சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்.. 6 பேருக்கு தீவிர சிகிச்சை!
காவல்நிலையத்தில் புகார் மற்றும் நடவடிக்கை:
கும்பல் சென்றதும் தப்பியோடி வந்த இசக்கிமுத்து, தனது காதல் மனைவியைக் மீட்டுத் தரக்கோரியும், தங்களை அச்சுறுத்தி உயிரைக் பறிக்க முயன்ற மாமனார் சசிகுமார் உள்ளிட்ட நால்வர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும் சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் சிவகாசி நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, கடத்தப்பட்ட கிருத்திகாவை மீட்கவும், தலைமறைவாக உள்ள அவரது பெற்றோரைத் தேடவும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.