Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

+2 படிக்கும் மகளை அடித்தே கொன்ற தந்தை.. குடிபோதையில் நடந்த கொடூரம்..

Father's brutal attack: இதனிடையே, படுகாயமடைந்த மாணவி வைஷ்ணவி டிசம்பர் மாதம் முதல் கடந்த 26 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். எனினும், காயம் கடுமையாக இருந்ததால், சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், நேற்று காலை வைஷ்ணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

+2 படிக்கும் மகளை அடித்தே கொன்ற தந்தை.. குடிபோதையில் நடந்த கொடூரம்..
மகளை அடித்தே கொன்ற தந்தை
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 12 Jan 2026 10:00 AM IST

விழுப்புரம், ஜனவரி 12: விழுப்புரம் அருகே 12ஆம் வகுப்பு மாணவியை அவரது தந்தையே கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிபோதையில் அவர் மகளை கொடூரமாக தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. மது அருந்துவதால் உடல்நலம் பாதிக்கப்படுவதுடன், ஒரு குடும்பத்தின் பாதுகாப்பும், அமைதியையும் சீர்குலையும் நிலை உள்ளது. குடிபோதையில் கட்டுப்பாட்டை இழந்து, வன்முறை மற்றும் நெருங்கியவர்களுக்கு எதிரான தாக்குதல் போன்ற சம்பவங்கள் அதிகம் நேரிடுகின்றன. விழுப்புரத்தில் நடந்த இந்தப் பயங்கர சம்பவமும், குடிபோதையில் எடுக்கும் தவறான செயல்கள் எத்தனை உயிர்களை அழிக்கக்கூடும் என்ற கடும் உண்மையை நினைவூட்டுகிறது. இந்த கொடூரச் சம்பவம் குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிக்க: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி வெட்டிக்கொலை.. சென்னையில் பகீர்!!

தாக்குதல் சம்பவம் எவ்வாறு நடந்தது?

விழுப்புரம் அருகே உள்ள கண்டமானடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு (46), கட்டிடத் தொழிலாளி. அவரது மனைவி ராஜலட்சுமி (39). இத்தம்பதியருக்கு வைஷாலி (20), வைஷ்ணவி (17) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். வைஷ்ணவி அருகிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பாபுவுக்கு நீண்டநாள் மதுவழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி பாபு மது அருந்திய நிலையில் வீடு திரும்பியதாக தெரிகிறது. அப்போது வீட்டில் தனியாக இருந்த மகள் வைஷ்ணவியிடம் சாப்பாடு கேட்டார். அதற்கு அவர், எதுவும் சமைத்து வைக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதனால், போதையில் இருந்த தந்தை பாபு கடும் கோபமடைந்தார்.

குடிபோதையில் மகள் மீது கொடூரத் தாக்குதல்:

தொடர்ந்து, நிதானம் இழந்த அவர், எதற்காக சாப்பாடு செய்யவில்லை எனக் கேட்டு மகளை அடித்துள்ளார். அதோடு, அவரது தலை முடியைப் பிடித்து இழுத்து சுவரில் மோதி, கீழே தள்ளி காலால் மிதித்தும் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. தந்தை இவ்வளவு கடுமையாக தன்னை தாக்குவார் என சற்றும் எதிர்பார்க்காத வைஷ்ணவி, நிலைகுலைந்தார். எனினும், ஆத்திரம் அடங்காத பாபு வைஷ்ணவியை மேலும் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவர் வலியில் கத்தி துடிதுடித்துள்ளார். தொடர்ந்து, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பாபுவிடம் இருந்து அவரை காப்பாற்றினர்.

இதையடுத்து, தாக்குதலில் படுகாயமடைந்த வைஷ்ணவியை மீட்ட அவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், கணவர் குறித்து ராஜலட்சுமி அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதோடு, அவர் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

தாகுக்குதலில் படுகாயமடைந்த வைஷ்ணவி:

இதனிடையே, படுகாயமடைந்த மாணவி வைஷ்ணவி டிசம்பர் மாதம் முதல் கடந்த 26 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். எனினும், காயம் கடுமையாக இருந்ததால், சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாக நேற்று காலை வைஷ்ணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, போலீசார் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : 40 வயது மருத்துவருடன் காதல்.. அறையில் பிணமாக கிடந்த மாணவி.. தோண்ட தோண்ட வெளிவந்த பகீர் தகவல்கள்!

பெற்ற மகளை 17 ஆண்டுகளாக சீராக வளர்த்து வந்த நிலையிலும், குடிபோதையில் நிதானம் இழந்து தந்தையே கொடூரமாகத் தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியினரிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.