“கோவில் பிரசாதம் தருவதாகக் கூறி நாடகம்”.. பெண்ணை கடத்தி நகைகளைப் பறித்த தம்பதி.. கோவையில் பரபரப்பு!!
காரில் மோனிகா சத்தம் போட முயன்ற போது, "அலறினால் கொலை செய்துவிடுவோம்" எனத் தம்பதியினர் இருவரும் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன அவர் சத்தம் போடாமல் இருந்துள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட தம்பதி, மோனிகாவின் கழுத்தில் இருந்த தாலிக்கொடி, தங்கச் செயின் மற்றும் மோதிரம் உள்ளிட்ட 5 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்தனர்.
கோவை, ஜுன் 14: கோவையில் கோவில் பிரசாதம் தருவதாகக் கூறி, கல்லூரிப் பெண் ஊழியரை காரில் கடத்தி, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு கேரளாவுக்குத் தப்ப முயன்ற தம்பதியை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்துள்ள திருமாலயம்பாளையத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி ரங்கநாதன். இவருடைய மனைவி மோனிகா, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவர்களின் வீட்டில் சென்னை திருவாரூரைச் சேர்ந்த விஸ்வநாதன் மற்றும் அவருடைய மனைவி ஷோபா ஆகியோர் சில காலம் வாடகைக்குக் குடியிருந்துள்ளனர். பின்னர் அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டுத் தங்களின் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர்.
மேலும் படிக்க: கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறல்.. தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்.. பாய்ந்தது வழக்கு!
பிரசாதம் தருவதாகக் கூறி கடத்தல்:
இந்நிலையில், மீண்டும் கோவைக்கு வந்த விஸ்வநாதன் – ஷோபா தம்பதி, மோனிகாவின் செல்போனுக்குத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். தாங்கள் கோவிலுக்குச் சென்று வந்ததாகவும், அவருக்காகப் பிரசாதம் கொண்டு வந்திருப்பதாகவும் கூறி, பணிபுரியும் கல்லூரிக்கு வெளியே வந்து வாங்குமாறு அழைத்துள்ளனர்.
முன்னாள் வாடகைதாரர்கள் என்பதால் அதை முழுமையாக நம்பிய மோனிகா, கல்லூரியின் வாசலில் வந்து காத்து நின்றார். அப்போது அங்கு காரில் வந்திறங்கிய விஸ்வநாதன் மற்றும் ஷோபா, பிரசாதத்தைக் கொடுப்பது போல நடித்து, கண் இமைக்கும் நேரத்தில் மோனிகாவைத் பலவந்தமாகக் காரில் ஏற்றி கடத்திச் சென்றனர்.
கொலை மிரட்டல் விடுத்து நகைகள் பறிப்பு:
காரில் மோனிகா சத்தம் போட முயன்ற போது, “அலறினால் கொலை செய்துவிடுவோம்” எனத் தம்பதியினர் இருவரும் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன அவர் சத்தம் போடாமல் இருந்துள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட தம்பதி, மோனிகாவின் கழுத்தில் இருந்த தாலிக்கொடி, தங்கச் செயின் மற்றும் மோதிரம் உள்ளிட்ட 5 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்தனர். பின்னர், ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஒரு வெறிச்சோடிய பகுதியில் மோனிகாவை இறக்கிவிட்டுவிட்டு காரில் தப்பியோடினர்.
வாகன சோதனையில் சிக்கிய தம்பதி:
இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட மோனிகா உடனடியாகக் க.க.சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எட்டிமடை மேம்பாலம் அருகே போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒரு காரை மறித்துச் சோதனை செய்தனர்.
மேலும் படிக்க: தவெகவினரின் தொடர் பாலியல் தாக்குதல்.. தமிழகம் மிகப்பெரிய தலைகுனிவை சந்திக்கும்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!
அந்த காரில் இருந்த தம்பதியிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மோனிகாவைக் கடத்தி நகைகளைப் பறித்த விஸ்வநாதன் – ஷோபா தம்பதி என்பதும், கொள்ளையடித்த நகைகளுடன் கேரளாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றதும் அம்பலமானது. இதையடுத்து போலீஸார் தம்பதியர் இருவரையும் உடனடியாகக் கைது செய்து, அவர்களிடம் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.