தவெகவினர் தற்குறி அல்ல.. மலையையே பிளக்கும் ஷார்ப்பான அம்புக்குறி!.. தவெகவிற்கு ஆதரவாக பேசிய ராகவா லாரன்ஸ்!
"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆசீர்வாதம் இல்லாமல் நான் எதையும் செய்ய மாட்டேன். என் முடிவை அறிவித்த பிறகு அவரிடம் ஆசீர்வாதம் வாங்குவேன்\" என்று லாரன்ஸ் குறிப்பிட்டார். அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு, \"நல்லது செய்வதற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அண்ணாமலை நல்லா படித்தவர், நல்ல அரசியல் புரிதல் உள்ளவர். புதிய ஆட்கள் அரசியலுக்கு வருவது நல்லதுதான்" என்று கூறினார்.
சென்னை, ஜுன் 14: தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களைச் சிலர் விமர்சிப்பது போல அவர்கள் தற்குறிகள் அல்ல; அது மலையையே பிளக்கும் ஷார்ப்பான அம்புக்குறி என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாகப் பேசியுள்ளார். மேலும், தனது அரசியல் வருகை குறித்து ஒரு நல்ல முடிவு எடுத்துள்ளதாகவும், அதனை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூடியது தவெக அரசின் ஒரு நல்ல செயல் என்றும், கல்வித்துறை அமைச்சர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார் என்றும் தவெக அரசிற்கு அவர் வரவேற்பு தெரிவித்தார்.
இதையும் படிக்க: “சீட்டுக்கட்டு போல அதிமுக சரிந்து கொண்டிருக்கிறது”.. இபிஎஸ் மீது சி.வி. சண்முகம் கடும் பாய்ச்சல்!
மலையையே உடைக்கும் அம்புக்குறி:
இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராகவா லாரன்ஸ் பேசியதாவது, விஜய்யின் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்களைச் சிலர் ‘தற்குறி’ என்று விமர்சிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த லாரன்ஸ், “ஒருவர் வேகமாக வளர்ந்து வரும் போது, அவர்களைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி விமர்சிப்பார்கள். மற்றவர்களின் பார்வையில் அது தற்குறியாகத் தெரியலாம். ஆனால், என் பார்வையில் அது தவெக-வின் ஷார்ப்பான அம்புக்குறி. அது நுழையாத இடத்திலும் நுழையும், பெரிய மலையையே உடைக்கும். கண்மூடி கண் திறப்பதற்குள் அவர்கள் வந்து அமர்ந்துவிட்டார்கள். அவர்கள் மீது பொறாமைப்படுவதையும், தினமும் விமர்சிப்பதையும் மற்றவர்கள் விட்டுவிட வேண்டும். அவர்கள் எப்படி ஜெயித்தார்களோ, அதைவிட நாம் எப்படி ஜெயிப்பது என்று மக்கள் மத்தியில் சென்று பேசுங்கள்” என்று எதிர்க்கட்சிகளுக்கு அறிவுறுத்தினார்.
தாயார் முன்னிலையில் அறிவிப்பு:
தனது அரசியல் வருகை குறித்துப் பேசிய அவர், “நான் அரசியலுக்கு வருவேனா இல்லையா என்பது குறித்து ஒரு நல்ல முடிவு எடுத்துள்ளேன். அதனை என் தாயார் முன்னிலையிலும், ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் முன்னிலையிலும் கூடிய விரைவில் மேடையில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன். திரையுலகில் டான்ஸ் மாஸ்டராக நான் அறிமுகமானது முதல் இந்த நிலைக்கு வளரும் வரை ஊடகங்கள் எனக்குப் பெரிய பக்கபலமாக இருந்திருக்கிறீர்கள். எனவே, உங்களிடம் சொல்லாமல் எந்த முடிவையும் எடுக்க மாட்டேன்” என்றார்.
அண்ணாமலை குறித்த பார்வை:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆசீர்வாதம் இல்லாமல் நான் எதையும் செய்ய மாட்டேன். என் முடிவை அறிவித்த பிறகு அவரிடம் ஆசீர்வாதம் வாங்குவேன் என்று லாரன்ஸ் குறிப்பிட்டார். அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு, “நல்லது செய்வதற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அண்ணாமலை நல்லா படித்தவர், நல்ல அரசியல் புரிதல் உள்ளவர். புதிய ஆட்கள் அரசியலுக்கு வருவது நல்லதுதான்” என்று கூறினார்.
இதையும் படிக்க: “தவெக அரசின் தவறுகளை ரீல்ஸ் மூலம் அம்பலப்படுத்துங்கள்”.. அதிமுகவினருக்கு இபிஎஸ் வகுத்த அதிரடி வியூகம்!
பணத்திற்காகவோ, பதவிக்காகவோ வரவில்லை:
அரசியல் களம் குறித்துப் பேசிய அவர், “நான் இங்கு சண்டை போடுவதற்கோ, வெறுப்பு அரசியல் செய்வதற்கோ வரவில்லை. இப்போது அறக்கட்டளை மூலம் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு என்னால் உதவ முடிகிறது என்றால், அதிகாரத்திற்கு வந்தால் லட்சக்கணக்கானோருக்கு உதவ முடியும். எனக்குப் பணமோ, பதவியோ தேவையில்லை. வாழும் போது எப்படி வாழ்ந்தோம், சாகும்போது இந்த ஊரே நமக்காக அழ வேண்டும் என்பதுதான் என் ஆசை” என்று உருக்கமாகப் பேசினார்.