தென்மாநில முதல்வர்கள் மாநாட்டைப் புறக்கணிக்கிறாரா புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி?.. ஆளுநருக்கு முன்னுரிமை அளித்ததால் சர்ச்சை!
Puducherry CM Rangasamy: சென்னை கோவலத்தில் நடைபெறும் தென்மாநில முதல்வர்கள் மாநாட்டைப் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் உரையாற்றும் அட்டவணையில், முதலமைச்சரை விடத் துணைநிலை ஆளுநருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை, ஆகஸ்ட் 20: சென்னையை அடுத்த கோவலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31-வது தென்மாநில முதல்வர்கள் மாநாடு இன்று நடைபெறவுள்ள நிலையில், இம்மாநாட்டைப் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி புறக்கணிக்க முடிவெடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மாநாட்டில் பேசும் அட்டவணையில் முதலமைச்சரை விடத் துணைநிலை ஆளுநருக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் அளிக்கப்பட்டதே இந்த அதிரடி முடிவுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ஆண்களுக்கும் வேண்டும் ‘Paternity Leave’.. 3-வது குழந்தை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கார்த்தி சிதம்பரம் எம்.பி!!
மாநாட்டில் ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்:
புதுச்சேரி ஒரு யூனியன் பிரதேசம் என்பதால் நிர்வாக ரீதியாகத் துணைநிலை ஆளுநருக்குக் கூடுதல் அதிகாரங்கள் உள்ள நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் ஆகிய இருவருக்குமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் உரையாற்றும் அதிகாரப்பூர்வ அட்டவணையில், முதலமைச்சருக்கு முன்பாகத் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. மக்களின் பிரதிநிதியான முதலமைச்சருக்குப் பிறகு துணைநிலை ஆளுநர் பேசும் வகையில் நெறிமுறை அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், ஆளுநருக்குப் பிறகு முதலமைச்சர் பேச வேண்டும் என அமைக்கப்பட்ட அட்டவணையால் ரங்கசாமி கடும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
மாநாட்டை புறக்கணிக்க ரங்கசாமி முடிவு:
புதுச்சேரி மாநிலத்திற்கு முழு மாநில அந்தஸ்து வேண்டும் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கே அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இந்த நிகழ்வு அதிகார அவமதிப்பாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் மாநாட்டைப் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளதாகவும், புதுச்சேரி சார்பில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் மட்டுமே பங்கேற்று உரையாற்றுவார் என்றும் முதலமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: மும்முனை போட்டிக்கு நடுவே புது கணக்கு.. தமிழக இடைத்தேர்தலில் உருவாகும் புதிய கூட்டணி? ஒரணியில் கரம் கோர்க்கும் முக்கிய தலைவர்கள்!
மாநாட்டில் பங்கேற்காததற்கு தொடர்பில்லை:
அதேவேளையில், முதலமைச்சர் ரங்கசாமி மாநாட்டில் பங்கேற்காததற்கும் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் பங்கேற்பதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த விவகாரங்களை மத்திய அரசிடம் எடுத்துரைப்பதற்காகவே துணைநிலை ஆளுநர் இம்மாநாட்டில் கலந்துகொள்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2018-19 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் அப்போதைய, முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அன்றைய துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஆகியோர் இணைந்து பங்கேற்ற நிலையில், தற்போது உருவெடுத்துள்ள இந்த அதிகாரப் போட்டி தென்மாநில அரசியலில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.