‘ஸ்கெட்ச்’ போட்ட போலீசார்.. தப்பியோட முயன்ற ரவுடி.. பாய்ந்தது துப்பாக்கி குண்டு.. சென்னையில் பரபரப்பு!!
அவர்களைப் பின்தொடர்ந்து துரத்திய காவல் துறையினர், ஒரு நபரைச் சமயோசிதமாக மடக்கிப் பிடித்தனர். ஆனால், மற்றொரு நபர் தன்னைத் துரத்தி வந்த தலைமை காவலர் ஆனந்தராஜ் என்பவரைத் திடீரெனத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றார். இதனால் தற்காப்புக்காகவும், குற்றவாளி தப்பிப்பதைத் தடுக்கவும் போலீசார் தங்களது துப்பாக்கியை எடுத்து அந்த ரவுடியின் முழங்காலுக்குக் கீழ் சுட்டனர்.
சென்னை, ஜுன் 28: சென்னை வண்டலூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற ரவுடிகளைப் பிடிக்கச் சென்றபோது, தலைமை காவலரைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வண்டலூரை அடுத்த ஓட்டேரி கரசங்கால் பகுதியில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானத்தில் பெரிய அளவில் கஞ்சா விற்பனை நடைபெறப் போவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் பையுடன் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை நெருங்கினர். போலீசாரைக் கண்டதும் அந்த நபர்கள் கையில் வைத்திருந்த பையுடன் அங்கிருந்து தப்பியோட முயன்றனர்.
இதையும் படிக்க : ராஜினாமா செய்ய மாட்டேன்! – மதிமுக எம்எல்ஏ அறிவிப்பால் பரபரப்பு – என்ன நடந்தது?c
போலீஸ் மீது தாக்குதல் – துப்பாக்கிச் சூடு:
அவர்களைப் பின்தொடர்ந்து துரத்திய காவல் துறையினர், ஒரு நபரைச் சமயோசிதமாக மடக்கிப் பிடித்தனர். ஆனால், மற்றொரு நபர் தன்னைத் துரத்தி வந்த தலைமை காவலர் ஆனந்தராஜ் என்பவரைத் திடீரெனத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றார். இதனால் தற்காப்புக்காகவும், குற்றவாளி தப்பிப்பதைத் தடுக்கவும் போலீசார் தங்களது துப்பாக்கியை எடுத்து அந்த ரவுடியின் முழங்காலுக்குக் கீழ் சுட்டனர். இதில் காலில் குண்டு பாய்ந்து காயமடைந்த அந்த ரவுடி நிலைதடுமாறி விழுந்ததை அடுத்து, போலீசார் அவரைப் பிடித்தனர்.
21 கிலோ கஞ்சா பறிமுதல்:
காயமடைந்த ரவுடியையும், உடன் பிடிபட்ட மற்றொரு நபரையும் மீட்ட போலீசார், உடனடியாக அவர்களைக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதற்கட்ட சிகிச்சை அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர்கள் வண்டலூர் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் கனகராஜ் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், அவர்கள் கடத்தி வந்த பையைச் சோதனை செய்ததில், சுமார் 21 கிலோ 600 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிக்க: திமுகவுக்குள் ஒலிக்கும் இருவேறு குரல்கள்.. இடைத்தேர்தல் களம் குறித்து தீவிர யோசனையில் மு.க.ஸ்டாலின்!
போலீசார் தீவிர விசாரணை:
சென்னை புறநகர்ப் பகுதிகளில் கஞ்சா விற்பனையைத் தடுக்கப் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ஒரே இடத்தில் 21 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதும், ரவுடி சுடப்பட்டதும் கரசங்கால் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கஞ்சா இவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது, இதனை வாங்குவதற்காக அங்கு வரவிருந்த நபர்கள் யார் என்பது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.