பிரதமர் மோடி வருகை.. தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு!
பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகை தருகிறார். தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தைத் திறந்து வைக்கிறார். இதனால், ஜூலை 26 அன்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை தூத்துக்குடி - திருநெல்வேலி இடையேயான கனரக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, ஜூலை 25: பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். 2025, ஜூலை 26 மற்றும் 2025, ஜூலை 27 ஆகிய இரு தினங்கள் அவர் வருகை தரவுள்ளார். இப்படியான நிலையில் பிரதமர் மோடி வருகையையொட்டி போக்குவரத்து மாற்றமானது செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி விமான நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட புதிய முனையம் திறப்பு விழாவிற்காக நாளை ஜூலை 26 வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு அறிவிப்புகள் தெரிவிக்கப்படுகிறது.
என்னென்ன போக்குவரத்து மாற்றங்கள்
அதன்படி பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியானது நடைபெறும் ஜூலை 26 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கும், திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கும் செல்வதற்கு எந்த ஒரு சரக்கு மற்றும் கனரக வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது. குறிப்பாக விழா நடைபெறும் வாகைகுளம் விமான நிலையத்தை கடந்து செல்வதற்கு கண்டிப்பாக அனுமதி அளிக்கப்படாது. அதேபோல் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி அல்லது ஸ்ரீவைகுண்டம் செல்லும் பிற வாகனங்கள் விமான நிலையத்தை கடந்து செல்ல முடியாத நிலையில் மங்களகிரி விலக்கில் வலது புறமாக திரும்ப வேண்டும்.
Also Read: வேற லெவலில் மாறிய தூத்துக்குடி ஏர்போர்ட்.. இனி இரவு நேர விமான சேவை.. இவ்வளவு வசதிகளா?




மேலகூட்டுடன்காடு, அல்லிக்குளம், திம்மராஜபுரம், வாகைகுளம் ஜங்ஷன் வழியாக செல்ல வேண்டும். அதேபோல் திருநெல்வேலி மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி வரும் மற்ற வாகனங்கள் விமான நிலையத்தை கடந்து செல்ல முடியாத பட்சத்தில் வாகைகுளம் ஜங்ஷன், வர்த்தகரெட்டிபட்டி, பேரூரணி, அல்லிக்குளம், மங்களகிரி விலக்கு வழியாக இலக்கை அடைய வேண்டும். மேலும் நிகழ்ச்சி நடைபெறும் அன்று அங்கு வருகை தரும் மிக முக்கிய நபர்களின் வாகனங்களைத் தவிர மற்ற எந்த வாகனங்களும் விமான நிலையத்தில் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடையாது.
நிகழ்ச்சிக்கு வருபவர்கள் கவனத்திற்கு
ஜூலை 26 ஆம் தேதி தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து விமான பயணம் மேற்கொள்வதற்காக முன்பதிவு செய்துள்ள பயணிகள் அனைவரும் பயண நேரத்திற்கு மூன்று மணி நேரம் முன்பாகவே வருமாறு அறிவுறுத்தப்படுகிறது. அதே சமயம் நிகழ்ச்சிக்கான பாஸ் வைத்திருப்பவர்களின் வாகனங்கள் வாகைக்குளம் டோல்கேட் அருகில் உள்ள வேலவன் நகர் வழியாக சென்று அதற்கான வாகன நிறுத்த இடத்தில் நிறுத்த வேண்டும்.
Also Read:வாகன ஓட்டிகளே அலர்ட்.. தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றம்.. முக்கிய ரூட் இதுதான்!
நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து விமான நிலையம் செல்லும் மெயின் கேட் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்த இடங்களில் நிறுத்திவிட்டு வரவேண்டும்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். எனவே காவல்துறை சூழ்நிலைக்கேற்ப மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் அனைவரும் தகுந்த ஒத்துழைப்பு கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.