இனி ரயில் நிலையத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை.. ரூ. 1000 அபராதம் என எச்சரிக்கை..
Railway Station Reels Fine: ரயில் நிலையங்கள், தண்டவாளம் ஆகியவற்றில் யார் வீடியோ எடுக்கிறார்கள் என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வீடியோ எடுப்பது தென்பட்டால் குறைந்தபட்சம் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜூலை 24, 2025: தற்போது மக்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் அதிகப்படியாக உள்ளது. குறிப்பாக பொது இடங்களில் ரிலீஸ் எடுக்கும் நிலை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுவும் ரயில் நிலையங்களில், ரயில் தண்டவாளங்களில், ரயில் பெட்டிகளில் ஆபத்தான முறையில் ரிலீஸ் எடுக்கும் மோகம் மக்களிடையே பிரபலமாகி வரும் காரணத்தால், அதன் ஆபத்து உணராமல் அதனை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் ரயில் நிலையங்களில் அல்லது தண்டவாளங்களில், ரயில் பெட்டிகளில் ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் மீது குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் செல்போன்களில் மூழ்கியுள்ளனர்.
பொது இடங்களில் அதிகரிக்கும் ரீல்ஸ் மோகம்:
மக்கள் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த ரீல்ஸ் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான மருத்துவமனை, கோவில்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகம், திரையரங்குகள் என பார்க்கும் இடமெல்லாம் தொலைபேசியை எடுத்து ரீல்ஸ் ரெக்கார்ட் செய்ய தொடங்குகிறார்கள். இதனால் அங்கு இருக்கக்கூடிய பொதுமக்களுக்கும் கடும் இன்னல்கள் ஏற்படுகிறது.
அதிலும் ஓடும் ரயிலில் ரீல்ஸ் எடுப்பது, தண்டவாளத்தில் ரயில் வரும் முன் அருகில் இருந்து வீடியோ எடுப்பது, தண்டவாளத்தில் நடந்து செல்வது, லைக் பெறுவதற்காக தண்டவாளத்தில் படுத்து உறங்குவது, ஓடும் ரயிலில் இருந்து நடைமேடையில் குதிப்பது, இதுபோன்ற பல்வேறு செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில சமயம் ரீல்ஸ் மோகத்தின் காரணமாக உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
மேலும் படிக்க: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்.. ஆக். 2-ல் தொடங்கப்படும் என அறிவிப்பு..
ரூ. 1000 அபராதம் மற்றும் கைது நடவடிக்கை:
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை அருகே ரீல்ஸ் மோகத்தால் 15 வயது மாணவனின் உயிர் பறிபோனது. இந்த நிலையில், ரயில் நிலையங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதனை தொடர்ந்து ரயில் நிலையங்களில் வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிடும் நபர்கள் மீது குறைந்தபட்ச ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் தேர் செல்ல வேண்டும்.. உயர்நீதிமன்றம் உத்தரவு..
இது தொடர்பாக பேசுகையில், “ பொதுவாக ரயில் நிலையங்களில் வீடியோ எடுக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. ஆனால் பலரும் இந்த ரீல்ஸ் மோகத்தின் காரணமாக வீடியோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர். எனவே ரயில் நிலையங்கள் தண்டவாளம் ஆகியவற்றில் யார் வீடியோ எடுக்கிறார்கள் என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரயில்வே போலீசார், பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ரயில் நிலையம் மேலாளர்கள் சிசிடிவி கேமராக்கள் மூலம் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடியோ எடுப்பது தென்பட்டால் குறைந்தபட்சம் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ரயில் பெட்டிகளில் இருந்து கீழே குதிப்பது அல்லது ஆபத்தான முறையில் ரிலீஸ் எடுத்தால் அவர்கள் மீது கைது நடவடிக்கையும் பாயும். இதனை அனைவருமே தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக” தெரிவித்துள்ளனர்