பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் தேர் செல்ல வேண்டும்.. உயர்நீதிமன்றம் உத்தரவு..
Chennai High Court: பெரம்பலூர் மாவட்டத்தில் வேத மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கும் போது, பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களின் வழியே தேர் செல்ல வேண்டும் எனவும், அதற்கு தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, ஜூலை 24, 2025: பெரம்பலூர் மாவட்டம், வேப்பன்தட்டை கிராமத்தில் உள்ள ஶ்ரீ வேத மாரியம்மன் கோவிலில் திருவிழா நடக்கும் போது, பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் தேர் செல்ல வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பன்தட்டை கிராமத்தில் உள்ள ஶ்ரீ வேத மாரியம்மன் கோவிலின் தேர் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் வருவதற்கு மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி, அந்த கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
வழக்கு பின்னணி என்ன?
அந்த மனுவில், பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் தேர் வருவதை உறுதி செய்ய ஆட்சியர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், குறிப்பிட்ட தெருவுக்குள் தேர் செல்ல முடியுமா? சாலையின் அகலம், தேரின் நீள, அகலம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருக்கு உத்தரவிட்டிருந்தது.
மேலும் படிக்க: புனித ஸ்தலங்களுக்கு போறீங்களா? தமிழக அரசு ரூ.10000 அறிவிப்பு…
இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், குறிப்பிட்ட தெருக்களில், எந்த இடையூறும் இல்லாமல் தேர் செல்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் தேர் செல்ல வேண்டும்:
இதை பதிவு செய்த நீதிபதி, கோவிலில் திருவிழா நடக்கும் போது, பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களின் வழியே தேர் செல்ல வேண்டும் எனவும், அதற்கு தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: 70 இணையதளங்களில் பகிரப்பட்ட அந்தரங்க வீடியோக்கள்… நீக்கம் செய்ய வழிமுறை என்ன?
பொதுவாக கோவில் திருவிழாவின் போது எல்லா தரப்பு மக்களும் ஒன்றாக இணைந்து, ஒரே இடத்தில் எந்த ஒரு வேறுபாடும் இன்றி மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. மக்களிடையே எந்த ஒரு வேறுபாடும் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஊருக்கும் அதன் மக்கள் மற்றும் கலாச்சாரம் தொடர்பாக கோயில் திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. திருவிழாவில் பல முறைகள் இருந்தாலும் அதன் நோக்கம் என்பது ஒன்றாகத்தான் உள்ளது.