‘உண்மையை சொல்கிறேன்’ சாத்தான்குளம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. அப்ரூவராக மாறும் ஆய்வாளர்!
Sathankulam Custodial Death Case : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அப்ரூவராக மாறி, உண்மையை அனைத்து சொல்லுகிறேன் என ஸ்ரீதர் மனுவில் குறிபிட்டுள்ளார். இது தொடர்பாக பதிலளிக்க சிபிஐ-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, ஜூலை 22 : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் (Sathankulam Custodial Death Case) முதல் குற்றவாளியான முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதாக மனு அளித்துள்ளார். மதுரை மாவட்ட முதல் கூடுதல் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். மகனை இழந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என ஸ்ரீதர் மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார். இது இந்த வழக்கின் பெரிய திருப்பமாக மாறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்தது ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் 2020ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் நடந்துள்ளது. சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் இரண்டு பேரையும் சாத்தான்குளம் போலீசார் அழைத்து சென்று கஸ்டடியில் வைத்து தாக்கி உள்ளனர். கொடூராக தாக்கியதில் இவர்கள் இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உட்டப 9 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைதாகினர். இந்த வழக்கை முதலில் சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், அதன்பிறகு வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், ஐந்து ஆண்டுகளாகியும் விசாரணை இறுதிக் கட்டத்தை கூட எட்டவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
சாத்தான்குளம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்
ஆனால், ஐந்து ஆண்டுகள் ஆகியும், விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் 105 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், 2400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையும் நீதிமன்றம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்னும் நீடித்து வருகிறது. நீதிக்கான ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். இப்படியான சூழலில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளி ஸ்ரீதர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தான் அப்ரூவராக மாற தயாராக இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசுப் தரப்பு சாட்சியாக அனைத்து தகவல்களையும், உண்மையும் சொல்ல விரும்புகிறேன். மனசாட்சிக்கு கட்டுப்பட்டு அனைத்து உண்மைகளையும் கூறுகிறேன். தந்தை மகனை இழந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் ஸ்ரீதர் மனுவில் தெரிவித்திருக்கிறார்.
தன்னை மன்னித்து , விடுதலை வழங்கும் பட்சத்தில், அப்ரூவராக மாறி நடந்த உண்மைகளை கூற விரும்புவதாக தெரிவித்துள்ளார். இந்த மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக இந்த வழக்கில் பெரிய முன்னேற்றம் ஏற்படாத நிலையில், தற்போது ஸ்ரீதர் தாக்கல் செய்த மனு, இந்த வழக்கில் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.