AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நேருவுக்கு வழங்கப்பட்ட முதல் செங்கோலை வடிவமைத்த உம்மிடி எத்திராஜ் மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

Veteran Jeweller Ethiraj Demise : இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் (Jawaharlal Nehru) 1947 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை வடிவமைத்த உம்மிடி எத்திராஜ் காலமானார். அவருக்கு வயது 99. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நேருவுக்கு வழங்கப்பட்ட முதல் செங்கோலை வடிவமைத்த உம்மிடி எத்திராஜ் மரணம்: பிரதமர் மோடி இரங்கல்
உம்மிடி எத்திராஜுடன் பிரதமர் மோடி
Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Oct 2026 21:09 PM IST

சென்னை, அக்டோபர் 21 : இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் (Jawaharlal Nehru) 1947 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை வடிவமைத்தவரும், சென்னையில் உள்ள உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் குடும்பத்தின் மூத்த உறுப்பினருமான உம்மிடி எத்திராஜ் அக்டோபர் 21, 2026 இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 99. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், உம்மிடி எத்திராஜின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. நகைக்கடை உரிமையாளர்கள், பல்வேறு வணிகச் சங்கங்களின் நிர்வாகிகள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து, அக்டோபர் 21, 2026 இன்று மாலை சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இதையும் படிக்க : ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் – தமிழக வீரர் சிவராஜனுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை – முதல்வர் விஜய் அறிவிப்பு

கடந்த 1900 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் இந்தியாவின் புகழ்பெற்ற நகை கடைகளில் ஒன்றாக 125 ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த உம்மிடி எத்திராஜ், இளம் வயதிலேயே நகை செய்யும் கைவினைஞராகத் தனது பணியைத் தொடங்கினார்.

முதல் செங்கோலை வடிவமைத்தவர்

கடந்த 1947 ஆம் ஆண்டில் இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றபோது, அதிகார மாற்றத்தின் அடையாளமாகக் குறிப்பிடப்படும் தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வடிவமைத்தவர்களில் உம்மிடி எத்திராஜும் ஒருவர். அந்தச் செங்கோல், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்ற ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2023 ஆம் ஆண்டில் புதுடெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டபோது, அந்தச் செங்கோல் மக்களவையில் நிறுவப்பட்டது. அப்போது, செங்கோலை வடிவமைத்த உம்மிடி எத்திராஜைப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

நகைத் தொழில் மட்டுமின்றி, சென்னை நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார். மேலும் ராமானுஜர் குறித்த நூல்களையும் அவர் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்

உம்மிடி எத்திராஜின் மறைவு குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவுச் செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்த அவர், நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோலை வடிவமைத்ததற்காக என்றென்றும் நினைவுகூறப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி – அடுத்த 2 நாட்களில் இந்த மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்

மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அந்தச் செங்கோலுக்கு உரிய மரியாதை அளிக்கும் வாய்ப்பு தனது அரசுக்குக் கிடைத்ததையும், அப்போது எத்திராஜைச் சந்தித்து நாட்டுக்கும் கலாசாரத்துக்கும் அவர் ஆற்றிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்ததையும் பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார். அவரது வாழ்க்கையும் கலைத்திறனும், இந்தியாவின் வளமான பாரம்பரியத்துக்கும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்துக்கும் இடையிலான தொடர்பைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்ட அவர், குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Follow Us