காவல் நிலைய அன்றாட செலவினங்களுக்காக ரூ. 71 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு அறிவிப்பு
Cash Expenses For Police Stations : தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களின் அன்றாடச் சில்லறை செலவினங்களுக்காக ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, காவல் நிலையங்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் செலவு நிதி, முன்பு இருந்ததைவிட 6 முதல் 8 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை, அக்டோபர் 21 : தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களின் அன்றாடச் சில்லறை செலவினங்களுக்காக ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, காவல் நிலையங்களுக்கு (Police Station) மாதந்தோறும் வழங்கப்படும் செலவு நிதி, முன்பு இருந்ததைவிட 6 முதல் 8 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காவல்துறையினரிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
காவல் நிலைய அன்றாட செலவினங்களுக்காக ரூ. 71 கோடி நிதி ஒதுக்கீடு
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைச் சிறப்பாகப் பராமரிப்பதும், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அரசின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் துறையின் நிர்வாக பணிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதற்கான செலவுகளும் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி – அடுத்த 2 நாட்களில் இந்த மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்




மூன்று வகை காவல் நிலையங்கள்
மாநிலத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களும், அந்தந்தக் காவல் நிலைய எல்லையில் பதிவாகும் குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அந்த வகைப்பாட்டின் அடிப்படையில், ஒவ்வொரு வகைக்கும் வழங்கப்படும் மாதாந்திர எதிர்பாராச் செலவு நிதி உயர்த்தப்பட்டுள்ளது.
- அதன் படி ரூ.3750 ஆக இருந்த இந்த நிதி தற்போது 8 மடங்கு அதிகரித்து ரூ.30000 ஆக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதனைத் தொடர்ந்து முன்பு ரூ.6,000 ஆக இருந்த நிதி தற்போது 6.7 மடங்கு அதிகரித்து ரூ.40,000 ஆக அதிகரித்துள்ளது.
- மேலும் ரூ.8,250 ஆக இருந்த நிதி தற்போது 6 மடங்கு அதிகரித்து ரூ.50,000 ஆக அதிகரித்துள்ளது.
காவலர்களுக்கு நிம்மதி
காவல் நிலையங்களுக்கான எழுதுபொருள்கள், வாகன எரிபொருள், விசாரணைக் கைதிகளுக்கான உணவு உள்ளிட்ட அன்றாடச் செலவுகளுக்கு, அரசு வழங்கும் குறைந்த தொகை போதுமானதாக இல்லை என்ற புகார் நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்தச் செலவுகளைச் சில சமயங்களில் காவலர்களே சொந்தப் பணத்தில் சமாளிக்க வேண்டிய நிலை இருந்ததாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், மாதாந்திர நிதி பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது காவல் நிலையங்களின் அன்றாடப் பணிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : ஓட்டுநருக்கு ஏற்பட்ட வலிப்பு… கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மோதியதில் டிரைவர், ஆட்டோ ஓட்டுநர் பலி…. கோவையில் பரபரப்பு
முன்னதாக சென்னை காவல் துறை தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்க நாள் விழாவில் தமிழக முதல்வர் விஜய் காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தமிழக காவல்துறையில் பணியின் போது உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5.96 கோடி காப்பீட்டு தொகை ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார். இந்த நிகழ்வு மக்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.