‘நகையே இல்லாமல் அடகு’.. கூட்டுறவு வங்கியில் கோடிக்கணக்கில் நடந்த மோசடி.. பகீர் தகவல்!!
இந்நிலையில், இந்த வங்கியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கோடிக்கணக்கில் நிதி முறைகேடு நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன. இப்புகாரை அடுத்து, கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் முருகேசன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் அந்த குறிப்பிட்ட காலகட்டத்தின் வங்கி கணக்குகளைத் தீவிர தணிக்கை செய்தனர்.
கன்னியாகுமரி, ஜுன் 17: குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில், தங்க நகைகளே இல்லாமல் போலி கணக்கு உருவாக்கி 2 கோடியே 65 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், வங்கியின் எழுத்தர் முத்துகிருஷ்ணன் என்பவரைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஆரல்வாய்மொழி பகுதியில் செயல்பட்டு வரும் இந்த கூட்டுறவு வங்கியில், உள்ளூர் விவசாயிகள், பொதுமக்கள் எனப் ஏராளமானோர் உறுப்பினர்களாக இருந்து பயனடைந்து வருகின்றனர்.
மேலும் படிக்க: கடையில் பணியாற்றிக்கொண்டு இருந்த சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர்.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!
மோசடி அம்பலமானது எப்படி?
இந்நிலையில், இந்த வங்கியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கோடிக்கணக்கில் நிதி முறைகேடு நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன. இப்புகாரை அடுத்து, கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் முருகேசன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் அந்த குறிப்பிட்ட காலகட்டத்தின் வங்கி கணக்குகளைத் தீவிர தணிக்கை செய்தனர். இந்த தணிக்கையின் போது, வங்கியில் உண்மையாகவே தங்க நகைகளை வைக்காமல், போலி ஆவணங்கள் மூலம் நகைகளை அடகு வைத்தது போலக் காண்பித்து, ரூ.2.65 கோடி வரை நூதன முறையில் மோசடி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
7 பேர் மீது வழக்குப்பதிவு:
துணைப்பதிவாளர் முருகேசன் அளித்த புகாரின் பேரில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இவ்வழக்கில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக மொத்தம் 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன்படி, முதல் குற்றவாளியாக சகாய திலக்ராஜ் (வங்கிச் செயலாளர், நாகர்கோவில் கோட்டாறு), தொடர்ந்து, வங்கி எழுத்தர்கள் முத்துகிருஷ்ணன் (ஆரல்வாய்மொழி) மற்றும் சிவனேஸ்வரி (கோட்டாறு) ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதோடு, அவர்களுடன் தொடர்புடையவர்கள் சகாய திலக்ராஜின் மனைவி பார்வதி சகாயமேரி, வங்கியின் உறுப்பினர் இசைப்பிரதீப் உள்ளிட்ட 7 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
போலீசாரின் தீவிர விசாரணை:
தலைமறைவாக இருந்த இவர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், தற்போது வங்கியின் எழுத்தாளரான முத்துகிருஷ்ணனைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட முத்துகிருஷ்ணன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தலைமறைவாக உள்ள மற்றொரு பெண் எழுத்தர் சிவனேஸ்வரி மற்றும் வங்கிச் செயலாளர் சகாய திலக்ராஜ் உள்ளிட்ட மற்ற 6 பேரையும் பிடிக்கும் பணியைப் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க: ஒரு காவலரே இப்படி செய்யலாமா? வைரல் புகைப்படத்தால் வந்த வினை.. நெல்லை எஸ்.பி. போட்ட அதிரடி உத்தரவு!
இந்த கும்பல் முழுமையாகக் கைது செய்யப்படும் பட்சத்தில், இந்த கோடிக்கணக்கான கூட்டுறவு வங்கி மோசடிப் பின்னணியில் உள்ள மேலும் பல முக்கியப் புள்ளிகள் சிக்குவார்கள் எனப் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.