பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதல் முறைகேடு புகார்.. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
பெரியார் அறிவுலகத்துக்கான புத்தகக் கொள்முதல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்து பாதுகாக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தனது புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 10, 2026: கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் இ.பரந்தாமன் சார்பில் வழக்கறிஞர் தாமோதரன் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
ரூ.50 கோடி புத்தகக் கொள்முதலில் முறைகேடு?
அந்த மனுவில், கோவை பெரியார் அறிவுலகத்துக்கு ரூ.50 கோடி மதிப்பில் புத்தகங்கள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி பெரியார் அறிவுலகம் திறந்து வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகங்களைப் பரிந்துரைப்பதற்காக 117 பேர் கொண்ட குழு கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், அவற்றில் சில செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தேனியில் தேசத்துரோக செயல்? அரசுப் பள்ளி கொடிக்கம்பத்தில் காலி மதுபாட்டில்.. அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்கள்!
குறிப்பாக, மோனிகா ரவி என்ற ஒரே எழுத்தாளரிடம் இருந்து 6 மாதங்களில் 162 புத்தகங்களும், லட்சுமி மோகன், தாமரை பன்னீர், தாமரை முரளி, ஜோதி ஹரிஹரன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் பெயர்களில் நூற்றுக்கணக்கான புத்தகங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பெயர்களில் உண்மையாகவே எழுத்தாளர்கள் இருக்கிறார்களா என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
புத்தகப் பரிந்துரைக் குழுவில் உறுப்பினராக இருந்த எழுத்தாளர் பெருமாள் முருகன், அகல் விளக்கு பதிப்பகத்தில் இருந்து 1,800 புத்தகங்கள் பெரியார் அறிவுலகத்துக்காக வாங்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, புத்தகக் கொள்முதல் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் குழு அமைத்துள்ளார். இருப்பினும், நிர்வாக ரீதியிலான விசாரணை மட்டும் போதுமானதாக இருக்காது என்றும், பாரபட்சமற்ற விசாரணை அவசியம் என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 7-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை எனக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் ரவுடிகள் வேட்டை.. ஒரே நாளில் 467 பேர் கைது.. 6540 பேருக்கு எச்சரிக்கை.. காவல் காட்டிய அதிரடி!
உயர்நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
பெரியார் அறிவுலகத்துக்கான புத்தகக் கொள்முதல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்து பாதுகாக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தனது புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.