பாக்யராஜ் மறைவு.. முதல்வர் விஜய் முதல் திருமாவளவன் வரை தலைவர்கள் உருக்கமாக இரங்கல்!
தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது லேக் ஏரியா இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்ட அவரது உடல், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையொட்டி, அப்பகுதியில் காவல்துறையினர் தடுப்பு வேலிகள் அமைத்து உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
சென்னை, ஜுன் 27: தமிழ் திரையுலகில் “திரைக்கதை மன்னன்” என்று போற்றப்படும் பிரபல இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் (வயது 73) இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவரது இந்த திடீர் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த பாக்யராஜ், இன்று அதிகாலை அங்குள்ள டென்னிஸ் ஸ்டேடியத்தில் வழக்கம்போல உடற்பயிற்சிக்காக வாக்கிங் சென்றுள்ளார்.
இதையும் படிக்க: நடிப்பிலும் இயக்கத்திலும் பல வெற்றிகளைப் பெற்ற பாக்யராஜின் பயணம் – ஒரு பார்வை
அதிகாலையில் திடீரென மாரடைப்பு:
அப்போது அவருக்கு திடீரென லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக இது குறித்து அவர் தனது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த குடும்பத்தினர், அவரைத் தங்களது வாகனத்திலேயே ஏற்றி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவர் ஏற்கனவே சில உடல்நலக் குறைபாடுகள் காரணமாகச் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
பொதுமக்கள் அஞ்சலிக்கு உடல்:
தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது லேக் ஏரியா இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்ட அவரது உடல், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையொட்டி, அப்பகுதியில் காவல்துறையினர் தடுப்பு வேலிகள் அமைத்து உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
முதல்வர் விஜய் இரங்கல்:
தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த… pic.twitter.com/Nun0KZ3biV
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 27, 2026
தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் எனப் பன்முகத் திறமையால் முத்திரை பதித்த கே.பாக்யராஜின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த அவரது பங்களிப்பு அளப்பரியது. பொழுதுபோக்கோடு சமூக விழுமியங்களைப் பேசிய அவரது படைப்புகள் காலத்தால் அழியாதவை. அவரது மறைவு திரைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரது கலைப் பங்களிப்பைப் போற்றும் வகையில், இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் இரங்கல்:
ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்!
இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய… pic.twitter.com/UgpbuWDwC5
— M.K.Stalin (@mkstalin) June 27, 2026
ஆசான் (பாரதிராஜா) மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரான பாக்யராஜையும் தமிழ்த் திரையுலகம் இழந்துவிட்டது வேதனையளிக்கிறது. இந்திய சினிமாவின் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, யதார்த்த நாயகனாக, அசாத்திய இயக்குநராக வலம் வந்த அவர், தன்னைப் போலவே பல இயக்குநர்களை வளர்த்தெடுத்தவர். சில மாதங்களுக்கு முன்புதான் அவர் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த விழாவில், முதலமைச்சராக மட்டுமின்றி அவரது ரசிகனாகவும் நான் கலந்துகொண்டு பேசிய நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன. இன்னும் பல ஆண்டுகள் திரைத்துறையில் பங்களித்திருக்க வேண்டிய அவரது மறைவு பெரும் இழப்பாகும். அவரது மனைவி பூர்ணிமா, சாந்தனு, சரண்யா உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவர் தமது படைப்புகளால் மக்கள் மனதில் என்றும் வாழ்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்.. திரையுலகில் பெரும் துயரம்
திருமாவளவன் இரங்கல்:
“இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் தலைமை மாணாக்கரும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் ‘எனது கலை வாரிசு’ என்று பிரகடனப்படுத்தப்பட்டவருமான திரையுலகப் பேராளுமை கே.பாக்யராஜின் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அண்மைக் காலம் வரை ஒரு இளைஞரைப் போலச் சுற்றிச் சுழன்று, சினிமா நிகழ்வுகளில் பங்கேற்றுப் பணியாற்றிய அவரது மரணத்தை மனம் ஏற்க மறுக்கிறது. பெண்களை வெகுவாக ஈர்த்த குடும்பப் பின்னணிப் படங்களையும், எவராலும் வெல்ல முடியாத தனித்துவமான திரைக்கதைகளையும் தமிழுக்கு அளித்த மாபெரும் கலை ஆளுமையைத் தமிழ் சமூகம் இழந்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று கூறியுள்ளார்.