கோவையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த வடமாநில கும்பல்.. அதிரடியாக குழந்தைகளை மீட்ட இளைஞர்கள்!
Using Infants For Begging | கோயம்புத்தூரில் சில வடமாநில கும்பல் பச்சிளம் குழந்தைகளை பிச்சை எடுக்க பயன்படுத்தி வந்துள்ளது. இந்த நிலையில், நேதாஜி நண்பர்கள் நற்பணி மன்ற இளைஞர்கள் அந்த கும்பலிடம் இருந்து பச்சிளம் குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மலுமிச்சம்பட்டி, ஜூன் 09 : கோயம்புத்தூர் மாவட்டம், மலுமிச்சம்பட்டி சிக்னல் பகுதியில் குழந்தைகளை பயன்படுத்தி சட்ட விரோதமாக பிச்சை எடுக்க வைத்த வடமாநில கும்பலிடன் இருந்து, நேதாஜி நண்பர்கள் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழந்தைகளை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட குழந்தைகள், குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வடமாநில கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த வடமாநில கும்பல்
கோவை – பொள்ளாச்சி பிரதான சாலையில் உள்ள மலுமிச்சம்பட்டி நான்கு ரோடு சிக்னல் உள்ளது. அது எப்போதும் கடுமையான வாகனப் போக்குவரத்தால் பரபரப்பாகக் காட்சி அளிக்கும். இந்த சிக்னலை பயன்படுத்திச் சில நாட்களாக வடமாநிலத்தை சேர்ந்த சில ஆண்களும், பெண்களும் தங்களது கைகளில் சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தைகளை தூக்கிக் கொண்டு, வெயிலில் அலைந்து பிச்சை எடுத்து வந்து உள்ளனர்.
இதையும் படிங்க : ராஜ்யசபா இடைத்தேர்தல்.. காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி வேட்புமனு ஏற்பு.. விரைவில் அறிவிப்பு வெளியாகிறது!
கடும் வெயிலில் பச்சிளம் குழந்தைகள் அழுது கொண்டே இருப்பதைப் பார்த்தும், மனிதாபிமானமே இல்லாமல் குழந்தைகளை வைத்து இந்தக் கும்பல் சட்டவிரோதமாகப் பணம் சம்பாதிப்பதை கண்டறிந்த அப்பகுதியைச் சேர்ந்த “நேதாஜி நண்பர்கள் நற்பணி மன்ற” இளைஞர்கள் இன்று அந்த பகுதிக்கு சென்ற குழந்தைகளை வைத்து யாசகம் எடுத்தவர்களை மடக்கிப் பிடித்தனர்.
வடமாநில கும்பலிடம் இருந்து குழந்தைகளை மீட்ட இளைஞர்கள்
பின்னர், அவர்களிடம் இருந்த பச்சிளம் குழந்தைகளைப் பத்திரமாக மீட்டெடுத்த இளைஞர்கள், இதுகுறித்து உடனடியாகத் துடியலூர், செட்டிபாளையம் காவல் நிலையத்திற்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவிற்கும் தகவல் கொடுத்துள்ளனர். மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் அனைவரும் தற்பொழுது மாவட்ட குழந்தைகள் காக்கும் மையத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும், குழந்தைகளைத் துன்புறுத்திப் பிச்சை எடுக்க வைத்த நபர்களைப் போலீஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்த வலியுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க : மீண்டும் ஒரு லாக்அப் டெத்? போலீஸ் விசாரணைக்கு சென்ற ஓட்டுநர் உயிரிழப்பு.. எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் நடந்தது என்ன!
கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கியச் சிக்னல்களில் இதுபோன்று பச்சிளம் குழந்தைகளை வைத்துக் கடத்தல் கும்பல் மற்றும் வடமாநிலத்தவர் பிச்சை எடுப்பது தற்பொழுது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருக்கும் பொதுமக்கள், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களுக்கு உடனுக்குடன் தகவல் அளிக்கின்றனர்.
ஆனால், குழந்தைகள் நல அதிகாரிகள் தகவல் கிடைத்தும் சம்பவ இடத்திற்கு உரிய நேரத்திற்கு வராமல் மெத்தனமாகச் செயல்படுகின்றனர். அதிகாரிகள் வருவதற்குள் பிச்சை எடுக்கும் கும்பல் குழந்தைகளுடன் அங்கு இருந்து தப்பியோடி விடுவதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.