தமிழகம் முழுவதும் நீட் தேர்வு தொடக்கம்… மாணவ, மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடு.. தேர்வு மையங்களில் தீவிர கண்காணிப்பு!
NEET Exam Started: தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நீட் தகுதி நுழைவு தேர்வு தொடங்கியது. இதில், 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாக உள்ளது.
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பி.டி.எஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி மற்றும் ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் ஆகிய படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை நீட் தேர்வின் அடிப்படையில் தகுதி பெரும் மாணவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகின்றன. 2026-27 கல்வி ஆண்டில் தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் இந்த தேர்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை ( மே 3) நாடு முழுவதும் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 30 நகரங்கள் உள்பட நாடு முழுவதும் 552 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இது மட்டும் இன்றி துபாய், அபுதாபி, மஸ்கட், தோகா சிங்கப்பூர், ரியாத் ஆகிய வெளிநாடுகளில் 14 இடங்களில் சுமார் 5,500 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.
2 லட்சம் மருத்துவ இடங்களுக்கு 22.80 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
இந்த தேர்வின் கீழ் சுமார் 2 லட்சம் மருத்துவ இடங்கள் இருக்கும் நிலையில், 9.47 லட்சம் மாணவர்கள், 13.33 லட்சம் மாணவிகள் என மொத்தம் 22.80 லட்சம் பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வில் வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆகிய பாடங்களில் இருந்து தலா 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டன. இதில், 180 கேள்விகளுக்கு பதில் அளித்தல் வேண்டும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள் என மொத்தமாக 720 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.
மேலும் படிக்க: பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு.. ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை… அதிரடியில் இறங்கிய சிபிஎஸ்இ!
ஆள்மாறாட்டத்தை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள்
அதன் அடிப்படையில், பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களின் வெற்றி தோல்வி நிர்ணயம் செய்யப்படும். இந்த தேர்வில் ஆள் மாராட்டத்தை தடுக்கும் விதமாக மே 2 மற்றும் மே 3 ஆகிய தேதிகளில் எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் எனவும், அவசிய காரணங்கள் இருந்தால் மட்டும் விடுமுறை அளிக்கலாம் என்றும் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் கடந்த வாரம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.
தீவிர சோதனைக்கு பின்னரே மாணவர்களுக்கு அனுமதி
மேலும், தேர்வு மையங்களுக்குள் மத நம்பிக்கை சார்ந்த அடையாளங்கள் மற்றும் பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை. சாதாரண ஆடைகளை அணியவும், முழு கை ஆடைகள் அல்லது கம்பளி ஆடை அணியவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும், தேர்வர்கள் உயரம் குறைந்த சாதாரண காலணிகளை அணிய வேண்டும் என்றும், உயரமான காலணிகள் மற்றும் கனமான அணிகலன்கள் ஆகியவற்றை அணியக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருந்தாலும், மாணவ மாணவிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் படிக்க: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் முன்பே தயார் நிலையில் பாடப்புத்தகங்கள்.. ஜூன் 1-இல் மாணவர்களுக்கு விநியோகம்!



