கொளத்தூர் மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி.. கண்ணீர் மல்க தொண்டர்கள் – சேகர்பாபு அழுகை!
MK Stalin Thanked Kolathur People : தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மு. க. ஸ்டாலின் தோல்வி அடைந்த நிலையில், அவர் சாலை வலமாக சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, திரண்டிருந்த தொண்டர்கள், பி.கே.சேகர் பாபு ஆகியோர் கண்ணீர் விட்டு அழுதனர்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று திங்கள்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், சென்னையில் உள்ள கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்ற கழக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. க. ஸ்டாலின் போட்டியிட்டார். இதில், ஆரம்பத்தில் இருந்தே தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ். பாபு முன்னிலை வகித்து வந்தார். அதன்படி, மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்தார். இதில், யாரும் எதிர்பாராத விதமாக இறுதி சுற்றின் முடிவில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி. எஸ். பாபுவிடன், மு. க. ஸ்டாலின் படுதோல்வி அடைந்தார். இதில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி. எஸ். பாபு 82 ஆயிரத்து 997 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மு.க. ஸ்டாலின் 74,202 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இவர்கள் இருவருக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் 8,795 வாக்குகள் ஆகும்.
கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்
இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு மற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மு க ஸ்டாலின் இன்று செவ்வாய்க்கிழமை மாலை சாலை வலம் சென்றார். அப்போது, அங்கு திரண்டிருந்த திமுக தொண்டர்கள் திமுகவின் திட்டங்களை கூறியதுடன், கண்ணீர் மல்க வருத்தம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இதை பார்த்த, மு. க. ஸ்டாலின் தொண்டர்களை ஆசுவாசப்படுத்தி அழ வேண்டாம் என்று தேற்றினார். மேலும், மு. க. ஸ்டாலின் உடன் சென்ற முன்னாள் அமைச்சர் பி. கே. சேகர்பாபு கண்ணீர் விட்டு அழுதார்.
மேலும் படிக்க: ஒரே குடும்பம்.. 3 எம்எல்ஏக்கள்.. தேர்தல் களத்தில் மார்ட்டின் குடும்பத்தினரின் மாஸ்டர் ஸ்கெட்ச்




அரசியல் தலைவர்களில் முதல் நபராக நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்
அதன்படி, தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அதற்கு மறுநாளே அரசியல் தலைவர்களில் முதல் நபராக மு. க. ஸ்டாலின் தான் போட்டியிட்ட கொளத்தூர் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு நேரடியாக சென்று தனது நன்றியை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மு. க. ஸ்டாலின் தோல்விய தழுவுவார் என்று யாரும் பிரிதளவில் எண்ணிப் பார்க்கவில்லை.
தவெக வசம் சென்ற கொளத்தூர் தொகுதி
அந்த தொகுதியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து 4 முறை மு க ஸ்டாலின் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவி வகித்து வந்தார். ஆனால், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் அந்த தொகுதி தமிழக வெற்றி கழகம் வசம் சென்றுள்ளது. இதே போல, சென்னையில் பல்வேறு தொகுதிகள் தவெக வசம் சென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்.. போலீஸ் பாதுகாப்புகள் வாபஸ்!!