AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பேரிடர் மேலாண்மைக்கு ரூ.1000 கோடி வழங்கியது மத்திய அரசு – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

இயற்கை சீற்றங்கள், வறட்சி, வெள்ளப்பாதிப்பு உள்ளிட்ட சூழ்நிலைகளை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார். “நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படாத வகையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. ஒருவேளை நிலச்சரிவு ஏற்பட்டாலும் மீட்பு பணிக்காக ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன” என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பேரிடர் மேலாண்மைக்கு ரூ.1000 கோடி வழங்கியது மத்திய அரசு – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Jun 2026 12:47 PM IST

ஜூன் 9, 2026: சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மாவட்ட அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் தென்மேற்கு பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “மக்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் அனைத்து துறைகளின் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன” என்றார்.

ஆன்லைனில் கிடைக்கும் மனுக்களுக்கு 5 நாட்களுக்குள் நடவடிக்கை:

சாதி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். குறிப்பாக, ஆன்லைன் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு ஐந்து நாட்களுக்குள் தீர்வு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், காலதாமதம் ஏற்பட்டால் மனுக்கள் தானாக ஏற்கப்பட்டதாக பதிவு செய்யும் நடைமுறை கொண்டு வரப்படும் என்றும் கூறினார்.

அரசு நிலங்கள் எங்கு உள்ளன, அவற்றை எவ்வாறு பயனுள்ளதாக பயன்படுத்தலாம் என்பது குறித்தும் ஆய்வு நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், பத்திரப்பதிவு மற்றும் பட்டா மாறுதல் பணிகளில் உள்ள தாமதங்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வெள்ள பாதிப்பை சமாளிக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

தென்மேற்கு பருவமழை குறித்து பேசிய அமைச்சர், “மாஞ்சோலை பகுதியில் அதிக மழை பதிவாகியுள்ளது. கூடுதல் மழை பெய்தால் மட்டுமே தாமிரபரணி ஆற்றில் நீர்மட்டம் உயரும். அதேபோல், குடகு பகுதியில் மழை குறைவாக இருப்பதால் மேட்டூர் அணைக்கு குறைந்த அளவிலேயே நீர் வரத்து உள்ளது” என தெரிவித்தார்.

மேலும் படிக்க: சென்னை ஆவடியில் ஈ.பி பெட்டியிலிருந்து 17 பியூஸ் கேரியர்களை திருடிய நூதன சம்பவம்.. இரண்டு பேர் கைது..

இயற்கை சீற்றங்கள், வறட்சி, வெள்ளப்பாதிப்பு உள்ளிட்ட சூழ்நிலைகளை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார். “நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படாத வகையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. ஒருவேளை நிலச்சரிவு ஏற்பட்டாலும் மீட்பு பணிக்காக ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன” என்றார்.

மேலும், “2026 வெப்ப செயல் திட்டம்” என்ற பெயரில் பேரிடர் மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு புத்தகம் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

ரூ.1000 கோடி நிதி வழங்கிய மத்திய அரசு:

பேரிடர் மேலாண்மைத் துறைக்காக மத்திய அரசிடம் ரூ.1000 கோடி நிதி கோரியதாகவும், “நாம் கேட்ட அதே தொகையை எந்த தயக்கமும் இல்லாமல் மத்திய அரசு வழங்கியுள்ளது. தேவையான நிதியை முன்னெச்சரிக்கையாக வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றும் அமைச்சர் கூறினார்.

முதலமைச்சரின் செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், “மக்களின் நலனுக்கான திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதே முதலமைச்சரின் முக்கிய நோக்கம். ஐந்தாண்டு கால வளர்ச்சித் திட்டம் தமிழ்நாட்டில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

முதலமைச்சர் செய்தியாளர்களை அடிக்கடி சந்திக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “செயல்பாடுகளே முக்கியம் என முதலமைச்சர் கருதுகிறார். திட்டங்கள் மக்களிடம் சென்றடைவதற்கே அவர் முன்னுரிமை அளிக்கிறார்” என தெரிவித்தார். இறுதியாக, “இன்னும் மூன்று மாதங்கள் பொறுத்திருந்து பாருங்கள். எங்கள் துறையின் செயல்பாடு ஜெட் விமான வேகத்தில் இருக்கும்” என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Follow Us