சவிதியில் தமிழக மீனவர் உயிரிழப்பு.. அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்..
TN Assembly: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் மாவீரன் சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, ஈரான் கடல் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவத்தில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை நடைபெற்று வருவதால் மீனவர் மாவீரனின் உடலை தமிழகம் கொண்டு வருவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆகஸ்ட் 20, 2026: சவுதி அரேபியாவில் தமிழக மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்துப் பேசினார். உயிரிழந்த மீனவரின் உடலை தமிழகம் கொண்டு வர தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
கவன ஈர்ப்பு தீர்மானம்:
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு பேரவை அலுவல்கள் தொடங்கின. நேரமில்லா நேரம் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், கேள்வி நேரம் நடைபெறவில்லை. கேள்வி நேரத்திற்கான பதில்கள் தயாரான பின்னரே அனுமதி அளிக்க முடியும் என சபாநாயகர் தெரிவித்தார். மேலும், நோட்டீஸ் அளித்த உடனேயே பேச அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: ஆண்களுக்கும் வேண்டும் ‘Paternity Leave’.. 3-வது குழந்தை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கார்த்தி சிதம்பரம் எம்.பி!!
சவுதி அரேபியாவில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் ஏற்கெனவே கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதுகுறித்து பேச அனுமதிக்கவில்லை எனக் கூறி அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
உயிரிழந்த மீனவர் உடலை கொண்டு வர நடவடிக்கை இல்லை – ஈபிஎஸ்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சவுதி அரேபியாவில் ஈரான் தாக்குதலில் மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் உயிரிழந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதிக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
உலகின் எந்தப் பகுதியில் தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும் அதற்காக குரல் கொடுப்பது வழக்கம் என்றும், தமிழருக்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தீர்மானம் அளித்து 5 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், ஒரு வாரமாகியும் சவுதி அரேபியாவில் உள்ள மீனவரின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்
இதற்கு சட்டப்பேரவையில் பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் மாவீரன் சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, ஈரான் கடல் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவத்தில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை நடைபெற்று வருவதால் மீனவர் மாவீரனின் உடலை தமிழகம் கொண்டு வருவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
உயிரிழந்த மீனவர் மாவீரனின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான தூதரக நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.