தமிழ்நாட்டிலேயே “மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி!”.. பேரவையில் வெடித்த சௌமியா அன்புமணி.. அமைச்சர் அளித்த உறுதி!!
Soumya Anbumani Slams NLC in TN Assembly: "தமிழ்நாட்டிலேயே மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி தான்" எனச் சட்டமன்றத்தில் பாமக உறுப்பினர் சௌமியா அன்புமணி கடுமையாகச் சாடினார். நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வேலை தராமல் வெளிமாநிலத்தவரை நியமிப்பதாகக் குற்றம்சாட்டிய நிலையில், முத்தரப்புக் குழு அமைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பேரவையில் உறுதியளித்தார்.
சென்னை, ஆகஸ்ட் 20: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தொடரில், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (NLC) தொடர்பான விவாதங்களின் போது உறுப்பினர்களிடையே கடுமையான வாக்குவாதங்களும் காரசாரமான கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன. குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் என்எல்சி நிறுவனம் அப்பகுதி மக்களுக்கும் நிலம் வழங்கிய விவசாயிகளுக்கும் உரிய நன்மைகளைச் செய்யாமல் வஞ்சிப்பதாகப் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேரவையில் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதையும் படிக்க: அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகை விவகாரம்.. பேரவையில் அமைச்சர் வன்னியரசு VS கோவி. செழியன் காரசார விவாதம்!!
மனசாட்சியே இல்லாத நிறுவனம் NLC:
சட்டமன்றத்தில் பேசிய முனைவர் சௌமியா அன்புமணி, “தமிழ்நாட்டிலேயே மனசாட்சியே இல்லாத ஒரு நிறுவனம் இருக்கிறது என்றால் அது என்எல்சி தான். நிலம் கொடுத்த விவசாயிகளை ஒரே இரவில் வெளியேற்றிவிட்டு, அப்பகுதியின் நிலத்தடி நீரையும் உறிஞ்சி இயற்கை வளங்களை முற்றிலும் பாழாக்கிவிட்டது. நிறுவனங்கள் தங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி மூலம் 1 சதவீத நிதியை மக்களுக்குச் செலவிட வேண்டும் என்ற விதி இருந்தும், என்எல்சி அதை முறையாகச் செய்வதில்லை. அவர்கள் சமர்ப்பிக்கும் கணக்குகள் அனைத்தும் தங்களின் சொந்த வளாகத்திற்குள் சாலைகள் மற்றும் பாலங்கள் அமைத்ததற்கே சரியாக இருக்கும் தவிர, மண்ணின் மைந்தர்களான சுற்றியுள்ள மக்களுக்கு எந்தப் பயனும் அளிப்பதில்லை” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
நுழைவுத் தேர்வு வைத்து வேலை வழங்கல்:
மேலும் தொடர்ந்த அவர், “நிலம் கொடுத்த விவசாயிகளுக்கோ அல்லது அவர்களின் பிள்ளைகளுக்கோ என்எல்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை. மருத்துவப் படிப்பு சேர்க்கை போல நுழைவுத் தேர்வுகள் நடத்தி, வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை அழைத்து வந்து வேலைக்கு அமர்த்துகின்றனர். மண்ணின் மைந்தர்களுக்குப் பயிற்சி அளித்து வேலை வழங்காமல், நுழைவுத் தேர்வு என்ற பெயரில் அவர்களுக்கு உரிய வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. எனவே என்எல்சி நிர்வாகம் வழங்கும் எந்தவொரு தகவலும் உண்மைக்குப் புறம்பானதே ஆகும்” எனக் கடுமையாகச் சாடினார்.
இதையும் படிக்க: “சொந்தமாகக் கார் இல்லை.. ஆட்டோவில் தான் வர்றேன்!”.. சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்த MLAக்கள்.. தேர்தல் பிரமாணப் பத்திரத்தால் வெளியான உண்மை!
அரசு கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்:
சௌமியா அன்புமணியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய மாநிலத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, “என்எல்சி நிறுவனம் குறித்து பேரவை உறுப்பினர் கூறிய கருத்துக்கள் மற்றும் சிஎஸ்ஆர் நிதி தொடர்பான பிரச்சனைகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. நமது தமிழ்நாடு அரசு என்றுமே விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து அவர்களின் பக்கமே நிற்கும். நிலம் கொடுத்த விவசாயிகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கான கமிட்டி அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. என்எல்சி நிர்வாகம் மக்களுக்கு எதிராகவோ அல்லது விதிமுறைகளை மீறியோ செயல்பட்டால், இந்த அரசு கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று பேரவையில் உறுதியளித்தார்.