மேகதாது விவகாரம்.. முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு!
Mekedatu issue: ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா பகுதிகளில் குருவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்த அவர், அடுத்த காவேரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்குரிய நீரை விரைவாகப் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சென்னை, ஜுன் 19: தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில், மேகதாது அணை கட்டுவதற்கு முற்படும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட அரசின் தனித் தீர்மானத்தின் மீது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கக் கொண்டு வரப்பட்ட இந்தத் தீர்மானத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முழுமனதாக வரவேற்பதாக அவர் அறிவித்தார். காவேரி நதிநீரில் தமிழ்நாட்டின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என்று உறுதியளித்த உதயநிதி ஸ்டாலின், காவேரி நடுவர் மன்றத்தின் இடைக்கால மற்றும் இறுதித் தீர்ப்புகள், உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் காவேரி மேலாண்மை வாரியம் ஆகியவை அமைக்கப்பட்டதற்கு முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளே முக்கியக் காரணம் என்பதை நினைவு கூர்ந்தார்.
இதையும் படிக்க: மேகதாது அணை விவகாரம்: அரசியல் கடந்து நாம் ஓரணியில் நிற்க வேண்டும் – தனித்தீர்மானம் முன்மொழிந்த முதல்வர் விஜய்
எடுக்கப்பட்ட முந்தைய நடவடிக்கைகள்:
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மேகதாது விவகாரத்தில் காட்டிய தீவிர எதிர்ப்புகளை அவர் பட்டியலிட்டார். ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே (ஜூன் மாதம்)மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதினார். ஜூலை மாதம் ஒன்றிய ஜல்சக்தி அமைச்சருக்குக் கடிதம் எழுதியதுடன், அனைத்துச் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி அணைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிதியாண்டு காலத்தில் கர்நாடக அரசு அணை கட்டுமானத்திற்காகப் பெருமளவு நிதியை ஒதுக்கீடு செய்தபோது, தமிழகச் சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றிக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசுக்கு அழுத்தம்:
திமுக அரசின் தொடர் எதிர்ப்பால் மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்தால் திருப்பி அனுப்பப்பட்டதுடன், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் அதன் ‘விதிமுறைகளை’தனது பட்டியலில் இருந்து நீக்கியது. மத்திய நீர்வள ஆணையம் ஏற்கனவே கர்நாடக அரசுக்குச் சில முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளதை உதயநிதி சுட்டிக்காட்டினார். மேகதாது அணை கட்ட எவ்வித நிபந்தனையற்ற அனுமதியும் வழங்கப்படவில்லை. திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் முன் தமிழ்நாடு அரசு தெரிவிக்கும் ஆட்சேபனைகளைப் பரிசீலிக்க வேண்டும். மத்திய மின்வாரிய ஆணையம் மற்றும் காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) முன் அனுமதியைப் பெற வேண்டும்.
புதிய திருத்தம் மற்றும் கோரிக்கை:
தமிழ்நாடு நீர்வளத்துறை அரசுச் செயலாளர் ஒன்றிய ஜல்சக்தி துறைக்கு எழுதிய கடிதத்தின் விவரத்தைக் குறிப்பிட்ட உதயநிதி, மேகதாது அணைப் பிரச்சினை ஒரு புதிய நதிநீர் தாவா என்பதால், நதிநீர் தாவா சட்டத்தின்படி (பிரிவு நாலின் கீழ்) புதிய நடுவர் மன்றம் அமைக்க ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் என்ற திருத்தத்தைத் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
முதல்வருக்கு முக்கிய வேண்டுகோள்:
ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா பகுதிகளில் குருவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்த அவர், அடுத்த காவேரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்குரிய நீரை விரைவாகப் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும் படிக்க: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவு இனி கட்டாயம்.. கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு!
இறுதியாக, இந்த முக்கியத் தீர்மானத்தை வெறும் கடிதமாக அனுப்பாமல், தமிழகத்தின் அனைத்துச் சட்டமன்றக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒரு கூட்டுக் குழுவாக நேரில் சென்று மத்திய அரசிடம் வழங்கி, தமிழகத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்று முதல்வர் விஜய் தலைமையிலான தற்போதைய அரசுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்தார். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தமிழகத்தின் உரிமைகளைக் காக்க திமுக எப்போதும் துணை நிற்கும் என்று அவர் உறுதி கூறினார்.