மதுரை நகைக்கடை கொள்ளை.. ஹைதராபாத்திற்கு நீளும் காவல்துறை விசாரணை.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
Madurai Tanishq Heist: மதுரையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் 15 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளைக் கண்டறிய 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, காவல்துறையின் ஒரு தனிப்படை ஹைதராபாத்திற்கு விரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு, மோட்டார் சைக்கிள் சென்ற பாதைகள் போன்ற தொழில்நுட்பத் தடயங்களை அடிப்படையாகக் கொண்டு தனிப்படை போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை, நவ.14: மதுரை நகரின் பிரதான மற்றும் பரபரப்பான பகுதியான வைப்பா சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட டாட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான ‘தனிஷ்க்‘ (Tanishq) நகைக்கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிர்ச்சியூட்டும் வகையில் பெருமளவு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடட்டின் கதவுப் பூட்டுகள் எதையும் உடைக்காமல், கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த கட்டடத்தின் சாரம் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர், கடையின் ஷோகேஸ்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 15 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வைர நகைகளைத் துணிகரமாக அள்ளிச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் மதுரை வணிக வட்டாரத்திலும் நகை வியாபாரிகள் மத்தியிலும் பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : 64 சிம் கார்டுகள் பொருத்தக்கூடிய வசதி – நிதி மோசடி முதல் ஆபாச படங்கள் வரை… சென்னையில் செயல்பட்டு வந்த நெட்வொர்க்
கடையின் உள்கட்டமைப்பு குறித்த சந்தேகம்:
இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் நேரடியாக ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருந்தாலும், அதன் பின்னணியில் குறைந்தது மூன்று பேருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று காவல்துறையினர் தீவிரமாகச் சந்தேகிக்கின்றனர். கொள்ளையடிக்க வந்த நபர் தனது அடையாளத்தை எங்குமே வெளிக்காட்டிக்கொள்ளாத வகையில் முழு உடலையும் மூடும் ஆடைகளையும், முகமூடியும் அணிந்து வந்துள்ளார். மேலும், கடையில் நகைகள் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்பதைத் துல்லியமாக அறிந்ததைப்போல, குறிப்பிட்ட ஷோகேஸ்களில் இருந்த நகைகளை மட்டும் குறிவைத்துத் திருடிச் சென்றுள்ளார். இதனால், கடையின் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து அத்துபடியாய் அறிந்த யாரோ ஒருவரின் உள்உதவி இவற்றுக்குக் கிடைத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ஒன்பது தனிப்படைகள் அமைப்பு:
மாபெரும் அளவில் நடைபெற்ற இந்த நகைக்கொள்ளை வழக்கை விசாரிப்பதற்காகக் காவல்துறைக் தரப்பில் உடனடியாக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடையின் மேலாளர், ஊழியர்கள், பிளம்பர்கள், எலக்ட்ரிசியன்கள் மற்றும் அண்மையில் பணியில் சேர்ந்தவர்கள் அல்லது விலகியவர்கள் எனப் பலரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சம்பவத்திற்கு முன்பு முகமூடி அணிந்து கடைக்கு வந்து சென்ற நபர் யார் என்பது குறித்தும் சிசிடிவி பதிவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. சந்தேகத்திற்குரிய நபர்களின் செல்போன் அழைப்பு விவரங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் சென்ற பாதைகள் போன்ற தொழில்நுட்பத் தடயங்களை அடிப்படையாகக் கொண்டு தனிப்படை போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க: ஆட்சியருக்கு ஆபாச மெசெஜ் அனுப்பிய விவகாரம்.. துப்பாக்கியால் சுட்டு தள்ளியிருப்பேன்.. பொங்கியெழுந்த ஜெயக்குமார்!
ஹைதராபாத்திற்கு நீளும் விசாரணை:
கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளை உடனடியாக உருக்கவோ அல்லது விற்கவோ வாய்ப்புள்ளதால், தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள நகை வியாபாரிகள் மற்றும் அடகு கடை உரிமையாளர்களிடம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துத் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர். இதற்கிடையே, குற்றவாளிகள் வேறு மாநிலங்களுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில், மதுரைக் காவல்துறையின் ஒரு தனிப்படை ஹைதராபாத்திற்கு விரைந்துள்ளது இவ்வழக்கில் கூடுதல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்கள் வழியாகக் கேரளா அல்லது வட மாநிலங்களுக்குத் தப்பிச் சென்றிருக்கக் கூடிய மர்ம நபர்களைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.