வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்.. தமிழகத்தில் நவம்பர் 17, 18ல் கனமழைக்கு வாய்ப்பு?
Chennai Rains: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 14, 2026: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் நவம்பர் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நவம்பர் 16ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நவம்பர் 13ஆம் தேதி நிலவரப்படி அதே பகுதியில் நீடிக்கிறது. இதனுடன் தொடர்புடைய வளிமண்டல சுழற்சி கடல் மட்டத்திலிருந்து சுமார் 5.8 கி.மீ. உயரம் வரை விரிவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நவம்பர் 14ஆம் தேதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக்கூடும். தொடர்ந்து நவம்பர் 15ஆம் தேதி காலை அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.
அதன்பிறகு வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16ஆம் தேதி மாலை மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: தவெக பெண்களுக்கு ஆபாச மெசெஜ்.. அட்ஜெஸ்ட் செஞ்சா பதவி.. மா.செ.வின் அந்தரங்க தொல்லை.. கொந்தளித்த மகளிரணி!
இதற்கிடையே, தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியுடன் தொடர்புடைய வளிமண்டல சுழற்சியில் இருந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைப் பகுதியையொட்டிய இந்தியப் பெருங்கடல் வழியாக மாலத்தீவின் வடக்குப் பகுதிகள் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு எங்கே?
நவம்பர் 14ஆம் தேதியான இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது.
நவம்பர் 15ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர தமிழகத்தில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
மேலும் படிக்க: பெண்ணின் வயிற்றில் 5 செ.மீ ஊசியை வைத்து தைத்த மருத்துவர் – உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
நவம்பர் 16ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தொடர்ந்து நவம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழை இருக்குமா?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.