Madurai Corporation: மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா.. காரணம் இதுவா?
Madurai mayor Indrani: மதுரை மாநகராட்சியில் நிகழ்ந்த சொத்து வரி முறைகேடு வழக்கில் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்டார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தின் விளைவாக, அரசியல் அழுத்தம் காரணமாக இந்திராணி தனது மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மதுரை, அக்டோபர் 16: மதுரை மாநகராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொத்து வரி வசூலிப்பதில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது அம்பலமானது. இது மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் 24 பேர் கைது செய்யப்பட்டனர். இப்படியான நிலையில் இந்திராணி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்திருப்பதாக சொல்லப்பட்டாலும் இதன் பின்னணியில் பல்வேறு விவகாரங்கள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடந்தது என்ன?
கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 4ம் தேதி மதுரை மாநகராட்சியின் மேயராக இந்திராணி பொறுப்பேற்றார். மதுரை மாநகராட்சியில் திமுக தனிப்பெரும் கட்சியாக 67 வார்டுகளை கைப்பற்றிய நிலையில் அமைச்சர்பிடிஆர் பழனிவேல் தியாகராஜரின் தீவிர ஆதரவாளராக இருந்த பொன் வசந்தின் மனைவி இந்திராணிக்கு மேயராகும் வாய்ப்பு கிடைத்தது. இவர் 57வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றிருந்தார்.




முதல் இரண்டு ஆண்டுகள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மேற்பார்வையில் நிர்வாகத்தை நடத்தி வந்த நிலையில் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் மாநகராட்சியில் பல்வேறு விதமான விஷயங்களிலும் தலையிட தொடங்கினார். நிழல் மேயராக இருந்து அதிகாரிகளை ஆட்டிப்படைத்த நிலையில் அவரிடம் தாக்குப் பிடிக்க முடியாமல் ஆணையாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதிகாரிகளை ஒருமையில் பேசுவது தொடங்கி டெண்டர் பங்கு, சொத்து வரி நிர்ணயம் போன்றவற்றில் பொன் வசந்த் தெரிவிக்கும் உத்தரவுகளை மேயரான இந்திராணி செயல்படுத்தினார். இது தொடர்பாக புகார்கள் வந்த போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பொன் வசந்தை வரவழைத்து எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அவர் தனது செயலை திருத்தாததால் ஒரு கட்டத்தில் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு மேயர் இந்திராணி வருவதற்கு பழனிவேல் தியாகராஜன் வாய்மொழி தடை விதித்தார்.
Also Read: மதுரையில் விரட்டி விரட்டி கடித்த தெரு நாய்.. அலறிய சிறுவன்.. அதிர்ச்சி வீடியோ!
சொத்து வரி முறைகேடு விவகாரம்
இந்த நிலையில் தான் சொத்துவரி முறைகள் விவகாரம் மதுரை மாநகராட்சியில் விஸ்வரூபம் எடுத்தது. தமிழக அரசுக்கு இது மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மண்டல தலைவர்கள் ஐந்து பேர் மற்றும் நிலை குழு தலைவர்கள் இரண்டு பேர் என 7 பேரை கூண்டோடு ராஜினாமா செய்ய உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்தில் இந்திராணியின் கணவர் பொன்வசந்தம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் இந்திராணி தொடர்ந்து மேயராக செயல்பட்டு வந்தார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. மண்டல தலைவர்களுக்கு ஒரு நியாயம், மேயருக்கு மற்றொரு நியாயமா என கட்சி நிர்வாகிகள் தலைமைக்கு எதிராக அதிருப்தி அடைந்தனர்.
தொடர்ந்து புதிய மேயரை தேர்வு செய்யும் பொறுப்பை நகராட்சி நிர்வாக துறை அமைச்சரானகே.என்.நேரு மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட அமைச்சர்களான மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரிடம் ஒப்படைத்தார். ஆனால் இருவருக்குள்ளும் ஒற்றுமை ஏற்படாததால் புதிய மேயரை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் தலைமையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதுமட்டுமல்லாமல் மதுரையில் பரப்புரை மேற்கொள்ள வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் சொத்துவரி முறைகேடு விவகாரம் தொடர்பாகவும், மேயரை பதவி நீக்கம் செய்யாமல் இருப்பது குறித்தும் கேள்வி எழுப்பினார்.
இதனால் திமுகவுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்ட நிலையில் நேற்று (அக்டோபர் 15) காலை சென்னைக்கு நேரில் மேயர் இந்திராணி மற்றும் ஆணையாளர் சித்ரா ஆகியோரை வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு விசாரணை நடத்தினார். பின்னர் அவரது முன்னிலையில் ராஜினாமா கடிதம் எழுதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நெல்லை மற்றும் கோவையில் கோஷ்டி பூசலில் மேயர் பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில் தற்போது ஊழல் புகார் காரணமாக மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
புதிய மேயர் தேர்தல்
இந்த நிலையில் மதுரை மாநகராட்சியின் புதிய மேயர் தேர்தல் வரும் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது அன்று துணை மேயர் நாகராஜன் தலைமையில் மாநகராட்சி மாவட்ட அவசர கூட்டத்திற்கு வருமாறு நேற்று (அக்டோபர் 14ஆம் தேதி) இரவு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.