Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பு முறைகேடு.. முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு.. ராஜினாமா செய்த மண்டல தலைவர்கள்

Madurai Corporation Property Tax Scam : மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களையும் ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாநகராட்சியில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அனைத்து மண்டல தலைவர்களையும் ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பு முறைகேடு.. முதல்வர் ஸ்டாலின்  போட்ட உத்தரவு..  ராஜினாமா செய்த  மண்டல தலைவர்கள்
முதல்வர் ஸ்டாலின்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 08 Jul 2025 07:34 AM

மதுரை, ஜூலை 08 : மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களையும் ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாநகராட்சியில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அனைத்து மண்டல தலைவர்களையும் ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேயர் இந்திராணியின் கணவர் கட்சியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டதை தொடர்ந்து,  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் மாவட்டமாக மதுரை உள்ளது. இந்த நிலையில், மதுரை மாநகராட்சியில் உள்ள தனியார் கட்டடங்கள், வீடுகளுக்கு சொத்துவரி குறைவாக நிர்ணயித்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பு முறைகேடு

இந்த ஊழல் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஓய்வு உதவி கமிஷனர் ரெங்கராஜன், மண்டலம் 3 தலைவரின் நேர்முக உதவியாளர் தனசேகரன், உதவி வருவாய் அலுவலர் குமரன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சதீஷ், உதவி ஆணையாளரின் உதவியாளர் கார்த்திகேயன், இடைத்தரர்களான உசேன், ராஜேஷ் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திமுக மண்டல தலைவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. அவர்களும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, சரவணபுவனேஸ்வரி (மண்டலம் 2), சுவிதா (மண்டலம் 5) ஆகியோரிடமும், அவர்களின் கணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து, மதுரையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் சித்ரா விஜயன் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டடது.

மேயர் இந்திராணி, திமுக மண்டல தலைவர்கள் பாண்டிசெல்வி, சரவண புவனேஸ்வரி, சுவிதா, முகேஷ் சர்மா, நகரமைப்பு, வரி விதிப்பு குழு தலைவர்கள் மூவேந்திரன், கண்ணன் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஒன் டு ஒன் என்ற பெயரில் உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் பேசினார்.

ராஜினாமா செய்த மண்டல தலைவர்கள்

அப்போது, தேவையான இடங்களில் தயவு தாட்சண்யமின்றி பதவியைப் பறிப்பேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 4 மண்டல தலைவர்கள், 2 குழு தலைவர்கள் என 6 பேர் ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேயர் இந்திராணிக்கு அமைச்சர் நேரு கடும் எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, மேயர் இந்திராணியின் கணவர் கட்சியில் நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 4 மண்டல தலைவர்கள், 2 குழு தலைவர்கள் என 6 பேர் ராஜினாமா செய்திருப்பதாக  தகவல் வெளியாகி உள்ளது. இந்த வரிவிதிப்பு முறைகேட்டை கண்டித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் 2025  ஜூலை 8ஆம் தேதியான இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.