Madurai: பெற்றோருடன் தகராறு.. 10ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
Student committed Suicide: மதுரையில் 10ஆம் வகுப்பு மாணவன் யுவன், பெற்றோருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஏர்கன் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சுடுதலில் ஆர்வமுள்ள யுவன், தேசிய போட்டிக்கு தயாராகி வந்த நிலையில், மன உளைச்சலில் இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மதுரை, அக்டோபர் 15: மதுரை மாவட்டத்தில் 10ம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி அருகே சம்பக்குளம் என்ற பகுதி உள்ளது. இங்கு இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வடிவேல் என்பவர் தனது மனைவி கிருத்திகா மற்றும் மகன் யுவன் உடன் வசித்து வருகிறார். தனியார் வங்கி அதிகாரியாக வடிவேலு பணியாற்றி வரும் நிலையில், கிருத்திகா வழக்கறிஞராக உள்ளார். மகன் யுவன் மேலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
அதே சமயம் துப்பாக்கிச் சுடுதலில் மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்த யுவன் அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பதக்கங்களை வென்றுள்ளார். அடுத்ததாக தேசிய அளவிலான போட்டிக்கு பங்கேற்பதற்காக தயாராகி வந்தார். இந்த நிலையில் இரு தினங்கள் முன்பு வீட்டில் யுவனுக்கும், அவனது பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இருவரும் யுவனை கண்டித்ததாக கூறப்படுகிறது.
Also Read: மது அருந்திய தகராறு.. கணவனை பானையால் அடித்து கொன்ற மனைவி
இதனிடையே நேற்று (அக்டோபர் 14) அவருடைய பெற்றோர் செவ்வாய்க்கிழமை என்பதால் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டனர். வீட்டில் யுவன் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது பெற்றோருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த யுவன் விபரீத முடிவு எடுத்துள்ளார். துப்பாக்கிச்சூடும் போட்டிகளுக்கு தான் பயன்படுத்தி வந்த ஏர்கன் துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோயில் சென்று விட்டு இரவில் வீடு திரும்பிய பெற்றோர் யுவன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினர். அவர்களது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் யுவன் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள்.
Also Read: திருமணத்தை மீறிய தொடர்பு.. காதலியின் கணவர் அடித்துக்கொலை!
பின்னர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகின்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)