தீபாவளி டிமாண்ட் – கட்டணத்தை அதிரடியாக குறைத்த ஆம்னி பேருந்துகள் – எவ்வளவு தெரியுமா?
Omni Bus Fare : தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணத்தை 3 மடங்காக உயர்த்தின. இது பெரும் சர்ச்சையான நிலையில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அக்டோபர் 20, 2025 அன்று தமிழகத்தில் தீபாவளி (Diwali) பண்டிகை கொண்டாடப்படவிருக்கிறது. இந்த நிலையில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். ஏற்கனவே ரயில்களில் (Train) கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், அரசு பேருந்துகளில் இடம் கிடைக்காதவர்களின் கடைசி நம்பிக்கையாக ஆம்னி பேருந்துகள் இருந்து வந்தன. இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை 2 மற்றும் 3 மடங்காக உயர்த்தின. குறிப்பாக சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்ல அக்டோபர் 17, 2025 அன்று ஆம்னி பேருந்து கட்டணமாக ரூ.5,000 வரை நிர்ணயிக்கப்பட்டது. இது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கைவிடுத்தார்.
கட்டணத்தை குறைத்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்
தீபாவளியை முன்னிட்டு கடந்த சில நாட்களாக ஆம்னி பேருந்து கட்டண உயர்வு சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக அக்டோபர் 17, 2025 அன்று சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லமாக கட்டணமாக ரூ.5,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கைவிடுத்திருந்தார். இந்த நிலையில், ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை குறைத்துள்ளன.
இதையும் படிக்க : ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை.. புகாரளிக்க எண்கள் அறிவிப்பு!
எவ்வளவு கட்டணம் குறைவு?
இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து புகார்கள் எழுந்த நிலையில் கட்டணத்தை குறைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். சென்னையில் இருந்து மதுரை செல்ல கட்டணமாக ரூ.4,000 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.2,600 ஆக குறைந்துள்ளது. மேலும் சென்னையில் இருந்து நெல்லைக்கு ரூ.5,000 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரூ.3,000 ஆக குறைந்துள்ளது.
பொதுவாக தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். இதனால் அதிக அளவில் ஆம்னி பேருந்துகளுக்கு டிமாண்ட் ஏற்படும். இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவது வழக்கமாக வைத்திருக்கின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணத்தை 3 மடங்காக உயர்த்தியுள்ளன.
இதையும் படிக்க : விடைபெற்ற தென்மேற்கு பருவமழை…. தீபாவளிக்கு மழை பெய்யுமா? வானிலை ஆய்வு மையம் தகவல்
மக்கள் இதனையடுத்து வாடகைக் கார்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கினர். இந்த நிலையில் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் கார்களை வாடகை கார்களாக பயன்படுத்தி தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதை அறிந்த டாக்சி டிரைவர்கள் போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுவரை 10க்கும் மேற்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.