Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

TN Assembly: 6 மாதங்களுக்குப் பின் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

அக்டோபர் 14 அன்று தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்குகிறது. நான்கு நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல், கரூர் சம்பவத்திற்கு அஞ்சலி செலுத்தப்படும். 2025-2026 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவு மானிய கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். எதிர்க்கட்சிகள் கரூர் சம்பவம், இருமல் மருந்து விவகாரங்கள் குறித்து கேள்விகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன

TN Assembly: 6 மாதங்களுக்குப் பின் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!
தமிழக சட்டப்பேரவை
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 14 Oct 2025 06:28 AM IST

சென்னை, அக்டோபர் 14: பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று (அக்டோபர் 14) தொடங்குகிறது. இந்த கூட்டமானது நான்கு நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். கிட்டதட்ட 6 மாதங்களுக்குப் பின் தமிழக சட்டப்பேரவை கூடுவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 13ஆம் தேதியான நேற்று சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்பது தொடர்பான அலுவல் ஆய்வுக் கூட்டம் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.  சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை. எனவே திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆலோசனை செய்தனர். இதனை தொடர்ந்து அக்டோபர் 17ஆம் தேதி வரை நான்கு நாட்கள் இந்த கூட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது.

நான்கு நாட்கள் நிகழ்ச்சி நிரல்

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு,  “சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. அன்று காலை வழக்கம் போல 9.30 மணிக்கு பேரவை கூடியதும், முதல் நாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, மறைந்த ஐஏஎஸ் அதிகாரி மருத்துவர் பீலா வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோரில் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும்.

Also Read:பாஜகவின் ஓரவஞ்சனை.. காட்டமாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!

தொடர்ந்து கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்படும். அதன் பின்னர் பேரவை நிகழ்ச்சிகள் அன்றைய தினம் ஒத்திவைக்கப்படுகிறது” என தெரிவித்தார்.

கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை 

இரண்டாம் நாளான அக்டோபர் 15ஆம் தேதி புதன்கிழமை நடைபெறும் கூட்டத்தில் 2025 – 2026 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும். மூன்றாம் நாளான அக்டோபர் 16ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தில் 2025 – 2026 ஆம் நிதியாண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்.

கடைசி நாளான அக்டோபர் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதில் உரை நடைபெறும். அதேபோல் அக்டோபர் 15 முதல் 17 ஆம் தேதி வரை பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். தொடர்ந்து 2025 – 2026 ஆம் நிதி ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் குறித்து நிதி ஒதுக்க சட்டம் முன்னறிவு பேரவையில் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்தேனா..? காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம்!

இந்த கூட்டத்தொடரில் கரூர் சம்பவம், இருமல் மருந்தால் குழந்தைகள் பலியான விவகாரம் ஆகியவை தொடர்பாக கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.