CM MK Stalin: பாஜகவின் ஓரவஞ்சனை.. காட்டமாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!
முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டை நிதி ஒதுக்கீடு, கல்வி திட்டங்களில் வஞ்சிப்பதாகக் குற்றஞ்சாட்டினார். தவறு செய்பவர்களுக்கு பாஜக அடைக்கலம் அளிக்கிறது என்றும், கரூரில் விரைந்து செயல்படுவது அரசியல் ஆதாயத்திற்கே என்றும் சாடினார். ராமநாதபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பேசியுள்ளார்.

ராமநாதபுரம், அக்டோபர் 3: தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே மத்தியில் உள்ள பாஜக அரசு வாடிக்கையாக வைத்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அரசு முறை பயணமாக அவர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் பின் நேற்றிரவு (அக்டோபர் 2) சாலை மார்க்கமாக ராமநாதபுரம் சென்றடைந்தார். அவருக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார்.
தொடர்ந்து இன்று (அக்டோபர் 3) காலை பேராவூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய திட்டங்கள் தொடக்க விழா ஆகியவற்றில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழ்நாட்டை வஞ்சிப்பதை மத்திய பாஜக அரசு வாடிக்கையாக வைத்துள்ளது. நமக்கு நிதி பகிர்விலும் ஓரவஞ்சனை செய்வதோடு பள்ளிக்கல்வி திட்டத்திற்கும் நிதி தர மறுக்கிறார்கள். அதேசமயம் பிரதமரின் பெயரால் உள்ள திட்டங்களுக்கும் நாம்தான் படி அளக்க வேண்டிய சூழல் உள்ளது” என தெரிவித்தார்.
Also Read: பசி, தூக்கம் மறந்துடுங்க.. மீண்டும் திமுக ஆட்சி.. ஸ்டாலின் அறிவுறுத்தல்!




தொடர்ந்து பேசிய அவர், “மேலும் தவறு செய்பவர்கள் அதிலிருந்து தப்பிக்க பயன்படுத்தும் வாஷிங் மெஷினாக தான் பாஜக உள்ளது. அப்படியாக தன்னை உத்தமராக்கிக் கொள்ள அதில் குறித்துள்ள எடப்பாடி பழனிசாமிக்கு ஆள் சேர்க்கும் அசைன்மெண்டை பாஜக கொடுத்து இருக்கிறது. எனவே தான் ஊருக்கு ஊர் மேடை போட்டுக்கொண்டு கூட்டணிக்கு யாராவது வருவார்களா என எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டு வருகிறார் என ஸ்டாலின் காட்டமாக விமர்சித்தார்.
மேலும் தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே மத்திய பாஜக அரசுக்கு ஏன் கசக்கிறது? என தெரியவில்லை. தமிழ்நாடு மேல் அவர்களுக்கு இருக்கும் வன்மத்தை எப்படியெல்லாம் காட்டுகிறார்கள் என நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தமிழ்நாட்டை மூன்று முறை மிகப்பெரிய பேரிடர் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் உடனே வராத, நிதி தராத, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்போது கரூருக்கு மட்டும் உடனே வருகிறார்.
Also Read: MK Stalin: முன்னேற்றத்துக்கான பாதை.. விடியல் பயணம் குறித்து மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
மணிப்பூர் கலவரம், குஜராத் விபத்து, கும்பமேளா உயிர் பலி ஆகியவை நடக்கும் போதெல்லாம் உடனே விசாரணைக் குழுவை அனுப்பாத பாஜக கரூருக்கு மட்டும் அனுப்புகிறது. இது எல்லாம் தமிழ்நாட்டின் மீது உள்ள அக்கறை கிடையாது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும் நிலையில் இதன் மூலம் ஏதாவது அரசியல் ஆதாயம் கிடைக்குமா என பாஜக நினைக்கிறது. இதை வைத்து யாரையாவது மிரட்டலாமா விரட்டலாமா என மத்திய அரசு பார்க்கிறது” என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.