MK Stalin: பசி, தூக்கம் மறந்துடுங்க.. மீண்டும் திமுக ஆட்சி.. ஸ்டாலின் அறிவுறுத்தல்!
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்க கட்சித் தொண்டர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பின்னடைவை எடுத்துக்காட்டி, திராவிட மாடல் அரசின் பொருளாதார வளர்ச்சியை அவர் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.

சென்னை, செப்டம்பர் 9: மீண்டும் திமுக ஆட்சி அமைவதற்காக தொண்டர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று காணொளி வாயிலாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், “தேர்தல் வெற்றி என்பது பொருளாதார வெற்றி போல மிகவும் முக்கியமானது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக கட்சி தொண்டர்கள் அயராது அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். திராவிட மாடல் 2.0 அரசு அமைவதை நமது குறிக்கோளாகும். எனவே வாக்குப்பதிவு நாள் வரை தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் பசி, தூக்கம் மற்றும் ஓய்வை மறந்து உழைக்க வேண்டும். சூரியன் தினமும் தவறாமல் உதிப்பது போல 2026 ஆம் ஆண்டு நாமும் மீண்டும் உதயம் அடைய வேண்டும் என அவர் கூறினார்.
திமுக ஆட்சியில் மறுமலர்ச்சி
மேலும் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு பின்னடைவுகளை சந்தித்தது. ஆனால் திராவிட மாடல் அரசின் கீழ் தமிழ்நாடு மறுமலர்ச்சி பெற்றது எனக் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், பொருளாதாரத்தில் 11. 19 சதவீத வளர்ச்சியை பெற்று இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது எனவும் தெரிவித்தார். மேலும் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மூலம் ரூபாய் 15,516 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், இது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Also Read: ‘குழந்தைகளை பார்த்ததும் எனர்ஜி வந்துருச்சு’ காலை உணவுத் திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
செப்டம்பர் 17ல் முப்பெரும் விழா
அரசின் சாதனைகளை கட்சியின் கொள்கைகளுடன் இணைத்து கடந்த ஜூலை 3ம் தேதி தொடங்கப்பட்ட ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரம் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களை திமுகவில் தொண்டர்கள் இணைத்துள்ளதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாளன்று 68,000த்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் உறுதிமொழி கூட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்க்கட்சிகள் போலி செய்திகள் மூலம் மக்களை திசை திருப்பும் முயற்சிகளை நம்பி இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டின் மண் மொழி மற்றும் கண்ணியத்தை பாதுகாத்து மக்களை ஒன்றிணைக்க திமுகவால் மட்டுமே முடியும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் கரூர் மாவட்டத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி திமுகவின் முப்பெரும் விழா நடைபெறும் என்றும் இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
Also Read: DMK: கடமைக்கு செய்யாதீங்க.. மா.செ.கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட உத்தரவு!
இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் செந்தில் பாலாஜியுடன் இணைந்து மாவட்ட செயலாளர்கள் பணியாற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
திமுக வெற்றி தமிழ்நாட்டின் வெற்றி
அதனை தொடர்ந்து செப்டம்பர் 20ஆம் தேதி ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் மாவட்ட வாரியாக பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும், 2026 சட்டமன்ற தேர்தல் வரை அரசை நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லுமாறு கட்சியை நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் எனது பயணங்கள் மட்டுமே வெற்றியை உறுதி செய்யாது. மாறாக உங்கள் ஆதரவும் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நம்பிக்கையும் தான் அதற்கு காரணமாக அமையும். நீங்கள் இல்லாமல் நான் இல்லை. எனவே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றி தமிழ்நாட்டின் வெற்றியாக இருக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.