AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எம்ஜிஆர் சொத்திற்கு உரிமை கோரிய ஜானகியின் மகன் – நீதிமன்றம் எழுப்பிய முக்கிய கேள்வி

MGR Property Legal Dispute : மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு திருச்சியில் உள்ள சொத்தை நிர்வகிக்கும் உரிமை கோரி, முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரனின் மகன் சுரேந்திரன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

எம்ஜிஆர் சொத்திற்கு உரிமை கோரிய ஜானகியின் மகன் – நீதிமன்றம் எழுப்பிய முக்கிய கேள்வி
எம்ஜிஆர்
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Sep 2026 21:06 PM IST

சென்னை, செப்டம்பர் 25: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு திருச்சியில் உள்ள சொத்தை நிர்வகிக்கும் உரிமை கோரி, முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரனின் மகன் சுரேந்திரன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. போதிய ஆவணங்களுடன் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சொத்து எவ்வாறு ஜானகி ராமச்சந்திரனுக்கு சென்றடைந்தது என்பதற்கான வாரிசு சான்றிதழும் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.

எம்ஜிஆர் சொத்திற்கு உரிமை கோரிய ஜானகியின் மகன்

முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரனின் முதல் கணவர் கணபதி பட்டின் மகனான சுரேந்திரன் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு சொந்தமாக உள்ளசொத்தை நிர்வகிக்கும் உரிமையை ஜானகியின் முதல் கணவரின் மகனான தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

மேலும் எம்ஜிஆர் 1987 ஆம் ஆண்டில் எழுதிய உயிலில் திருச்சி சொத்து பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. எம்ஜிஆரின் சுயசரிதையான நான் ஏன் பிறந்தேன்என்ற நூலின் காப்புரிமை வழக்கில், ஜானகிதான் அவரது வாரிசு என ஏற்கெனவே நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அப்படியென்றால் அவரது சொத்து ஜானகிக்குச் சேரும். ஜானகிக்கும் கணபதி பட்டுக்கும் மகனான தனக்கு அந்த உரிமை வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் எம்ஜிஆரின் சகோதரர் சக்கரபாணியின் வாரிசுகளும், திருச்சி சொத்தில் தங்களுக்கும் பங்கு உண்டு, எனவே தங்களையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்று வாதிட்டனர். இந்த வழக்கு செப்டம்பர் 25, 2026 இன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பையும் கேட்ட நீதிபதி, மனுவில் இருந்த ஒரு முக்கிய முரண்பாட்டைச் சுட்டிக்காட்டினார். ஜானகியின் முதல் கணவர் 1972 ஆண்டு லதான் இறந்ததாக மனுவில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், எம்ஜிஆர் மற்றும் ஜானகி திருமணம் 1962 ஆண்டிலேயே நடந்துள்ளது. முதல் கணவர் உயிருடன் இருந்தபோது நடந்த இரண்டாவது திருமணம் சட்டப்படி எப்படி செல்லும் என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. விவாகரத்து ஆவணமும் தாக்கல் செய்யப்படவில்லை என்றார்.

நீதிமன்றம் எழுப்பிய முக்கிய கேள்வி

மேலும் எம்ஜிஆரின் சொத்து ஜானகி ராமசந்திரனுக்கு எப்படி வந்தது என்பதற்கான வாரிசு சான்றிதழும் இல்லை. ஜானகி 1996 ஆம் ஆண்டு மறைந்த நிலையில், 23 ஆண்டுகள் கழித்து 2019 ஆம் ஆண்டில் தான் வழக்கு போடப்பட்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகளில் சொத்து யார் கையில் இருந்தது, யார் பெயருக்கு மாறியது, அடமானம் வைக்கப்பட்டதா என எதையும் மனுதாரர் விளக்கவில்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டார். இந்தக் காரணங்களால், சுரேந்திரனின் வழக்கையும் சக்கரபாணி வாரிசுகளின் இடையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனுதாரர் வழக்கு தொடரலாம் என்றும் தெரிவித்தார்.

Follow Us