எடப்பாடி பழனிசாமி மீது மான நஷ்ட ஈடு வழக்கு…. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Edappadi Palaniswami Defamation Case : சென்னை உயர்நீதிமன்றத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த அவதூறு வழக்கில், அதிமுக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, ஜனவரி 19 : சென்னை உயர்நீதிமன்றத்தில் (Madras High Court), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த அவதூறு வழக்கில், அதிமுக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் அதிமுக எம்.பி. கே.சி. பழனிசாமி தனது மனுவில், தன்னைப் பற்றி அவதூறாக பரப்பியதாக கூறி, இதனால் தனக்கு மனநலம் பாதிக்கப்படாக கூறி, ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மேலும், தன்னை குறித்து இனி அவதூறான கருத்துகளை வெளியிடக் கூடாது என எடப்பாடி பழனிசாமி மற்றும் சூலூர் அதிமுக ஒன்றியச் செயலாளர் கந்தவேலு ஆகியோருக்கு தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
கே.சி. பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலின் பேரில், சூலூர் ஒன்றியச் செயலாளர் கந்தவேலு, தனக்கு எதிராக பொய்யான புகார் அளித்ததாக கே.சி. பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அதில், அதிமுகவில் போலி உறுப்பினர்களை சேர்த்து பணம் வசூலித்ததாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தன்னை கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : கரூர் சம்பவம்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும் த.வெ.க தலைவர் விஜய்..




அந்த வழக்கில், கோயம்புத்தூர் நீதிமன்றம் 19 நாட்களுக்குப் பிறகு தன்னை ஜாமீனில் விடுவித்ததாகவும், பின்னர் கடந்த 2024 ஆம் ஆண்டு அந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்களால் தன்னுடைய மதிப்பு பாதிக்கப்பட்டதாகவும் மற்றும் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டதாகக் கூறி, அதற்கான இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
இதையும் படிக்க : இந்த 7 மொழி இலக்கியங்களுக்கு செம்மொழி இலக்கிய விருது – முதல்வர் அறிவிப்பு
இந்த மனு, ஜனவரி 19, 2026 அன்று நீதிபதி பி.தனபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் கந்தவேலு ஆகியோர் பிப்ரவரி 13, 2026 அன்றுக்குள் தங்களது பதில்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார். இந்த உத்தரவு, அதிமுக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், வரும் நாட்களில் இந்த வழக்கு மேலும் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.