Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காங்கிரஸ் தலைமை பேச்சை மீறிய மாணிக்கம் தாகூர் எம்.பி.? மீண்டும் டிவிட்டரில் கருத்து பதிவு!

Manickam Thakur MP: கூட்டணி விவகாரம் தொடர்பாக பொது வெளியில் பேசக்கூடாது என்று காங்கிரஸ் தலைமை உத்தரவிட்ட நிலையில், மாணிக்கம் தாகூர் எம். பி. மீண்டும் ட்விட்டரில் கூட்டணி குறித்த கருத்தை பதிவு செய்துள்ளார். இதனால், காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமை பேச்சை மீறிய மாணிக்கம் தாகூர் எம்.பி.? மீண்டும் டிவிட்டரில் கருத்து பதிவு!
காங்கிரஸ் தலைமை பேச்சை மீறிய மாணிக்கம் தாகூர் எம்பி
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 18 Jan 2026 13:14 PM IST

டெல்லியில் நேற்று காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் வேணுகோபால் ஆகியோருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையிலான கட்சியினர் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டிருந்தனர். இந்த ஆலோசனையில், கூட்டணி விவகாரம், ஆட்சி அதிகாரத்தில் பங்கு, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது என்று காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையும் செய்தியாளர்களிடம் இந்த கருத்தை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், விருதுநகர் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரான மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் கூட்டணி தொடர்பான கருத்தை மீண்டும் பதிவிட்டுள்ளார். இது காங்கிரஸ் கட்சியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி.மீண்டும் கருத்து

தமிழகத்தில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால், அந்த கட்சியிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை என்று டெல்லியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக ஆங்கில செய்தி சேனலில் செய்தி வெளியாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அதாவது திமுகவுடன் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கேட்கப்படாது என்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவில்லை என்று மாணிக்கம் தாகூர் எம். பி. ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று தமிழகம் வருகை…தொகுதி பங்கீடு-கூட்டணி இறுதி செய்ய வாய்ப்பு!

தவெகவில் இணையபோகும் மாணிக்கம் தாகூர்

இதனிடையே, திமுகவின் ஆதரவாளர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்றும் முடிவில் மாணிக்கம் தாகூர் எம்பி தோல்வியை சந்தித்ததால், அவர் அந்த கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தின் இணைய உள்ளார் என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு, மாணிக்கம் தாகூர் எம்பி பதில் அளிக்கும் வகையில், “அல்றசில்ற ஐடி விங் கனவு பலிக்காது கண்ணா, நான் உண்மையான காங்கிரஸ்காரன்” என்று பதில் கருத்து பதிவிட்டுள்ளார்.

மாணிக்கம் தாகூர் எம்பி ட்விட்டர் பதிவு

 

காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு

தமிழகத்தில் கூட்டணி விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் பேசக்கூடாது என்று தேசிய தலைமை உத்தரவிட்ட நிலையில், தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திக்கு மாணிக்கம் தாகூர் எம். பி. கருத்து தெரிவித்திருப்பது கட்சியின் தலைமை உத்தரவை மீறுவதாக உள்ளதாகவும், தனியார் சேனல் வெளியிட்ட செய்திக்கு தேசிய தலைமை பதிலளிக்காத நிலையில் இவர் எதற்காக முன்கூட்டியே பதில் அளிக்கிறார் என்றும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க: சிபிஐ விசாரணை…விஜய் இன்று மாலை டெல்லி புறப்படுகிறார்!