திமுகவை தவிர்த்து தவெகவுடன் கூட்டணி அமைக்கிறதா காங்கிரஸ்? டெல்லி கூட்டத்தில் நடந்தது என்ன!
Tamil Nadu Congress: திமுகவுடன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைமையுடன், தமிழக காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் என்ன ஆலோசிக்கப்பட்டது. என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், டெல்லியில் உள்ள கட்சியின் இந்திரா பவனில் காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையிலான கட்சியினர் நேற்று சனிக்கிழமை ( ஜனவரி 17) ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் கூட்டணி விவகாரம், தொகுதி பங்கீடு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு, தவெகவுடன் கூட்டணி அமைப்பது என்பன உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், தமிழக மக்கள் ஆர்.எஸ். எஸ், பாஜகவின் மத வெறி, கூட்டாட்சி எதிர்ப்பு, பாகுபாடு காட்டும் அரசியல், சமூக நீதி, அதிகாரம் அளித்தல் ஆகிய நல்லாட்சியை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்றும், தமிழக மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பங்கு வகிப்பதற்கு உறுதியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தி-மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அதிகாரம்
இதே போல, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக காங்கிரஸ் கட்சியினரின் கருத்துக்களை காங்கிரஸ் தலைமை பொறுமையாக கேட்டுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்கான எதிர்கால உத்தியை கையாள்வதில் கவனம் செலுத்த வேண்டும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் முடிவுகளை எடுப்பதற்கு ஒரு மனதாக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வியூகங்களை பொறுத்தவரை கட்சியின் சித்தாந்தத்தின் பரந்த நலனையும், தமிழக மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு காங்கிரஸ் தலைமை உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கும்.
மேலும் படிக்க: “ஆண்களுக்கு இலவசப் பேருந்து யாராவது கேட்டார்களா?”.. அதிமுக வாக்குறுதிகளை சரமாரியாக விமர்சித்த சீமான்!!




காங்கிரஸ் உயர் மட்ட குழு உத்தரவு
மேலும், அனைத்து தலைவர்களும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதுடன், சமூக வலைதளங்களில் அறிக்கைகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் உயர் மட்ட குழு உத்தரவிட்டுள்ளது. கூட்டணி தொடர்பான ஊகங்களை தவிர்த்து, காங்கிரஸ் தலைமை முடிவுகளுக்கு ஏற்ப ஒரே குரலில் பேச வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், திமுகவுடன் ஆட்சியில் பங்கு கேட்பது தொடர்பாக காங்கிரஸ் தலைமை ஆலோசனை மேற்கொண்டு ஒரு முடிவு எடுக்கும் என்று தெரிவித்தார்.
முக்கியத்துவம் பெற்ற காங்கிரஸ் உயர்மட்ட குழு கூட்டம்
புதுச்சேரியில் வரும் ஜனவரி 21- ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் மேற்கொள்ளப்படும் பாதயாத்திரையில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூர் எம்பி, பிரவீன் சக்கரவர்த்தி, சச்சின் பைலட் ஆகியோர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் உயர் மட்ட குழு கூட்டம் நடைபெற்றது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க: பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று தமிழகம் வருகை…தொகுதி பங்கீடு-கூட்டணி இறுதி செய்ய வாய்ப்பு!