சென்னையில் 3 சுங்கச் சாவடிகளில் வருகிறது புதிய தொழில்நுட்பம்…இனி வாகனங்கள் விரைந்து செல்லலாம்!
Toll Gate New Technology: சென்னையில் 3 சுங்கச் சாவடிகளில் மல்டி லேன் ப்ரீ ப்ளோ எனப்படும் புதிய தொழில்நுட்பம் சோதனை முறையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதன் மூலம் வாகனங்கள் வெறும் 15 வினாடிகளில் சுங்கச்சாவடியை கடந்து செல்ல முடியும்.
தமிழகத்தில் சுமார் 90-க்கு அதிகமான சுங்கச் சாவடிகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சுங்கச் சாவடிகள் வழியாக தினந்தோறும் ஏராளமான இலகுரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை சென்று வருகின்றன. இவ்வாறு சென்று வரும் வாகனங்களின் பயண நேரத்தை குறைக்கவும், சுங்க கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதத்தை குறைக்கவும் சோதனை அடிப்படையில் “மல்டி லேன் ப்ரீ ப்ளோ” – என்ற புதிய தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி, முதல் முறையாக சென்னையில் 3 சுங்கச் சாவடிகளில் இந்த புதிய தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. அதன்படி, சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்னசமுத்திரம், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனூர் சுங்கச் சாவடி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ( நெமிலி) சுங்கச்சாவடிகளில் இந்த புதிய தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதனால், இந்தச் சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்காமல் விரைந்து செல்ல முடியும்.
மல்டி லேன் ப்ரீ ப்ளோ- என்ற புதிய தொழில்நுட்பம்
தற்போது, சிறிய வாகனங்கள் முதல் பெரிய அளவிலான வாகனங்கள் வரை பாஸ்ட்டேக் முறையில் (ஆன்லைன் மூலம்) சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது, இந்த “மல்டி லேன் ப்ரீ ப்ளோ” முறையின் மூலம் சுங்க சாவடி வழியாக வரும் வாகனங்கள் சிறிது நேரம் கூட நிற்காமலேயே தானாகவே, கட்டணம் வசூலிக்கப்படும். இதனால், பொதுமக்களின் பயண நேரம் வெகுவாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ள சுங்க சாவடிகளில் உயரமான கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
மேலும் படிக்க: பொங்கல் விடுமுறை முடிந்து பயணிகள் ஊர் திரும்ப சிறப்பு பேருந்துகள் – விவரம் இதோ




புதிய தொழில்நுட்பம் செயல்படும் முறை
அந்த கம்பங்களில் ரேடார் ஸ்கேனர்கள், கேமராக்கள், பாஸ்ட் டேக் தானியங்கி முறையில் கார் நம்பரை அடையாளம் காணும் அமைப்பு ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும். இதன் மூலம், சுங்கச் சாவடி வழியாக வரும் வாகனங்களின் பாஸ்ட் டேக் கார்டு மற்றும் வாகனத்தின் நம்பர் உள்ளிட்டவற்றை கேமராக்கள் ஸ்கேன் செய்து தானியங்கி முறையில் சுங்க கட்டணத்தை எடுத்துக் கொள்ளும். பரனூர் சுங்க சாவடி வழியாக தினந்தோறும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களும், ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி வழியாக தினந்தோறும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களும் சென்று வருகின்றன.
15 வினாடிகளில் கடந்து செல்ல முடியும்
இதனால், வாகனங்களுக்கான சுங்க கட்டணத்தை பெறுவதில், ஒவ்வொரு நாளும் தாமதம் ஏற்படுவதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதனால், பொது மக்களின் பயண நேரமும் அதிகரிக்கிறது. இந்த புதிய அமைப்பின் மூலம் ஒரு வாகனமானது சுங்க சாவடியில் வெறும் 15 வினாடிகளில் கடந்து செல்ல முடியும். இந்த புதிய தொழில்நுட்பம் சோதனை ஓட்டம் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் நிலையில், இந்த சுங்க சாவடி வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்துவதற்காக காத்திருக்காமல் அதிவேகமாக செல்லலாம்.
மேலும் படிக்க: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு?.. விடைபெறும் வடகிழக்கு பருவமழைக்கு.. வானிலை அப்டேட்..