கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி…கோவையில் 1,200 பண்ணைகளுக்கு செக்!
Kerala Bird Flu Outbreak: கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலியால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 1200 கோழி பண்ணைகளில் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில், மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தற்போது வரை பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படவில்லை.
கேரள மாநிலத்தில் கோட்டையம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் வாத்து, கோழிகள் உள்ளிட்ட பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பண்ணைகளில் கலந்து சில வாரங்களுக்கு முன்பு திடீரென சந்தேகத்துக்கிடமான வகையில் வாத்து மற்றும் கோழிகள் உயிரிழந்தன. இது தொடர்பாக, கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில், வாத்து மற்றும் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த பண்ணைகளில் உள்ள வாத்து, கோழி, காடை உள்ளிட்ட 13,000 பறவைகள் அழிக்கப்பட்டன. மேலும், மாநிலம் முழுவதும் உள்ள கால்நடை பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வரும் வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகளை சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. மேலும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக- கேரள எல்லையிலும் தீவிர கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் 1200 பண்ணைகளில் தீவிர சோதனை
அதன்படி, கோவை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,200 கோழிப் பண்ணைகளில் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் பறவை காய்ச்சல் தொடர்பான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், கால்நடை பண்ணைகளில் சந்தேகத்துக்கிடமான வகையில், கோழி, வாத்து, காடை உள்ளிட்ட பறவைகள் உயிரிழந்திருக்கின்றனவா? ஏதேனும் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் அறிகுறி உள்ளனவா? என்பது குறித்தும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் படிக்க: சென்னை மெரீனா கடற்கரையில் நாளை திருக்குறள் வார இசை நிகழ்ச்சி…பொதுமக்கள் பங்கேற்கலாம்!




பறவை காய்ச்சல் தென்படவில்லை
இந்தச் சோதனையில், தற்போது வரை கோவை மாவட்டத்தில் பறவைகள் மத்தியில் பறவை காய்ச்சலுக்கான அறிகுறி தென்படவில்லை. கேரளாவில் இருந்து கறிக்கோழிகள் இறக்குமதி செய்யப்படவில்லை. அதற்கு மாற்றாக, கோவையில் இருந்து தான் கேரளாவுக்கு கறிக்கோழிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இருந்தாலும், கோவை மாவட்டம் முழுவதும் உள்ள 1,200 கோழிப் பண்ணைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கால்நடை பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்
மேலும், ஏதேனும் பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டாலோ அல்லது சந்தேகமான முறையில் பறவைகள் உயிரிழந்தாலோ கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பண்ணைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பறவைகளின் பண்ணைகள், இறைச்சிக் கடைகள், நீர்நிலைகள் உள்ளிட்டவற்றில் ஒவ்வொரு மாதமும் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தச் சோதனையிலும் தற்போது வரை கோவை மாவட்டத்தில் பறவை காய்ச்சலுக்கான அறிகுறி கண்டறியப்படவில்லை.
தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்பு பணி
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, கேரளா பறவை காய்ச்சல் எதிரொலி தொடர்பாக தமிழக- கேரள எல்லையில் கோவை மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளில் கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை மருத்துவக் குழுவினர் உள்ளிட்டோர் சோதனையில் ஈடுபட்டனர். கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை சோதனைக்கு பின்னரே தமிழக பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் பறவை காய்ச்சல் சம்பவம் எதிரொலித்துள்ளது.
மேலும் படிக்க: பொங்கலுக்கு டாஸ்மாக் மது விற்பனை புதிய உச்சம் – 2 நாட்களில் எவ்வளவு வசூல் இத்தனை கோடியா?