நல்ல பாம்பை பிடித்து வந்து ஆரத்தி எடுத்து வினோத வழிபாடு…அதுவும் தமிழ்நாட்டில்…எங்கு தெரியுமா!
Kanchipuram Snake Worship: தமிழகத்தில் கால் நடைகளுக்கு பூஜை செய்து வழிபாடு செய்வது போல, காஞ்சிபுரத்தில் பழங்குடியின மக்கள் நல்ல பாம்பை பிடித்து வந்து பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழிபாடானது பொது மக்கள் மத்தியில் வினோதமாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மாட்டுப் பொங்கல் என்றாலே வீடுகளில் வளர்க்கப்படும் காளை மாடுகள் மற்றும் பசு மாடுகள் உள்ளிட்ட கால் நடைகளுக்கு பொங்கலிட்டு, சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கமாகும். ஆனால், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள சாத்தனஞ்சேரி பகுதியில் ஒரு உள்ள பழங்குடியினர் இதற்கு மாறாக ஒரு வினோதமான நிகழ்வை பின்பற்றி வருகின்றனர். அது என்னவெனில், பழங்குடியின மக்கள் பொங்கலுக்கு முந்தைய நாள் காட்டுப் பகுதிகளுக்கு நேரடியாக சென்று அங்கு சுற்றி திரியும் நல்ல பாம்பை பிடித்து வீடுகளுக்கு கொண்டு வருகின்றனர். அப்படி கொண்டு வரப்படும் நல்ல பாம்புகளுக்கு வீட்டில் தனது முன்னோர்கள் கூறிய படி சடங்குகளையும், வழிபாடுகளையும் மேற்கொள்கின்றனர். அப்போது, அந்த நல்ல பாம்புக்கு குங்குமம், மஞ்சள் ஆகியவை பொட்டாக வைத்து வணங்குகின்றனர்.
ஒவ்வொரு வீடுகள் முன் நல்ல பாம்புக்கு வழிபாடு
அதன் பின்னர், அந்த நல்ல பாம்பை தங்கள் ஊரில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கு நேரடியாக கொண்டு சென்று காண்பிக்கும் நடைமுறையை பின்பற்றி வருகின்றனர். அப்போது, ஒவ்வொரு வீடுகளுக்கு முன்பு நின்று கொண்டு நாங்கள் நல்ல பாம்புக்கு பூஜை செய்து கொண்டு வந்துள்ளோம் என்று கூறி வீட்டினுள் உள்ள மக்களை அழைப்பார்களாம். அதன் பின்னர், அந்த மக்கள் வெளியே வந்து நல்ல பாம்புக்கு கற்பூரம் ஏற்றி தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்கின்றனர்.
மேலும் படிக்க: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு…காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு அரசுப் பணி…முதல்வர் அறிவிப்பு!




பண்பாட்டை வெளிப்படுத்தும் பாரம்பரிய நிகழ்வு
இதன் பின்னர், அந்த பாம்புகளை கொண்டு வந்த பழங்குடியின மக்களுக்கு பணத்தை நன்கொடையாக வழங்குகின்றனர். இதைத் தொடர்ந்து, அந்த நல்ல பாம்பை பழங்குடியின மக்கள் எந்த தொந்தரவும் செய்யாமல் மீண்டும் காட்டுப் பகுதிக்கு சென்று விட்டு விடுகின்றனர். இந்த பழக்கமானது முந்தைய பழங்குடியின மக்கள் காலத்தில் இருந்து தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த பழக்கமானது பழங்குடியின மக்களின் மரபு, இயற்கை மீதான நம்பிக்கை, பாம்புகள் மீதான அச்சமின்றி உடைய மரியாதை மற்றும் கிராமத்து பண்பாட்டு தனி சிறப்பை வெளிப்படுத்தும் ஒரு பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ
தமிழகத்தில் கால் நடைகளுக்கு பூஜை உள்ளிட்ட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் மேற்கொண்டு வரும் இந்த நிகழ்வானது அந்த ஊரில் வினோதமாக பார்க்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க: தொடர் விடுமுறை.. மாதவரம், மணலி ஏரிகளுக்கு படையெடுத்த மக்கள்.. படகு சவாரி கட்டணம் குறைப்பு!!