30 ரயில் நிலையங்களில் குளு குளு வசதியுடன் காத்திருப்பு அறை.. தெற்கு ரயில்வேயின் பிரம்மாண்ட ஏற்பாடு.. பல்வேறு வசதிகள்!
Sothern Railway: தமிழகத்தில் உள்ள 30 முக்கிய சந்திப்பு ரயில் நிலையங்களில் ஏசி வசதியுடன் கூடிய காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த அறைகளில் பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பதையும், அதற்கான கட்டணம் என்ன என்பதையும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் ரயில் நிலையங்களில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், தினந்தோறும் ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக, நடைமேடைகள், குடிநீர் வசதி, இருக்கை வசதி உள்ளிட்டவை நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, ரயில் நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் சிறிது நேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது. அவ்வாறு காத்திருக்கும் பயணிகளுக்கு ரயில் நிலையங்களில் ஏசி காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட உள்ளன. இதில், அதிக அளவு பயணிகள் வருகை தரும் ரயில் நிலையங்களில் ஏசி வசதியுடன் கூடிய காத்திருப்பு அறைகள் மற்றும் ஏசி வசதி இல்லாத காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
30 ரயில் நிலையங்களில் ஏசி காத்திருப்பு அறை
அதன்படி, கரூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஏசி வசதியுடன் கூடிய காத்திருப்பு அறை அமைக்கப்பட்டு, நேற்று முதல் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதே போல, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், திருவாரூர் சந்திப்பு ரயில் நிலையம், திண்டுக்கல் சந்திப்பு ரயில் நிலையம், மயிலாடுதுறை மற்றும் சேலம் சந்திப்பு ரயில் நிலையம் உள்பட 30 முக்கிய சந்திப்பு ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக ஏசி காத்திருப்பு அறைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: குடிப்பதற்கு பணம் தரமாட்டாயா… என்ன செய்கிறேன் என்று பார்… மகன் செய்த பகீர் சம்பவம்!




ஏசி காத்திருப்பு அறையில் உள்ள வசதிகள்
இதற்கான பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு கோடை காலத்துக்கு முன்பாக பயணிகள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வேயின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த ஏசி காத்திருப்பு அறையில் சொகுசான இருக்கைகள், பெண்கள் பாலூட்டும் அறை, இலவச ஃவைபை வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏசி காத்திருப்பு அறையானது 24 மணி நேரமும் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரத்துக்கு ரூ.25 கட்டணம்
இந்த ஏசி காத்திருப்பு அறையை பயன்படுத்துவதற்கு பயணி ஒருவருக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை ரயில் நிலையங்களில் உள்ள கவுண்டர்களில் செலுத்தி ஏசி அறையை பயன்படுத்திக் கொள்ளலாம். கடந்த சில நாள்களுக்கு முன்பு தாம்பரம் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஏசி வசதியுடன் கூடிய காத்திருப்பு அறை திறக்கப்பட்டது. இந்த அறை பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதே போல, தமிழகத்தின் முக்கியமான ரயில் நிலையங்களில் ஏசி காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: திருநெல்வேலி இரட்டை கொலை சம்பவம்… சிறையில் இருந்து திட்டம் தீட்டியல் கும்பல்… பரபரப்பு பின்னணி!