பொங்கலுக்கு டாஸ்மாக் மது விற்பனை புதிய உச்சம் – 2 நாட்களில் எவ்வளவு வசூல் இத்தனை கோடியா?
Pongal Liquor Sale: பொங்கலை முன்னிட்டு தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது விற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஜனவரி 14, 15, 2026 ஆகிய 2 நாட்களில் மட்டும் தமிழ்நாட்டில் ரூ.518 மது விற்பனையாகியிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
சென்னை, ஜனவரி 17 : பொங்கல் (Pongal) பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான விற்பனை புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த 2026 ஆம் ஆண்டு பொங்கல் விடுமுறையில், ஜனவரி 14 மற்றும் ஜனவரி 15, 2026 ஆகிய 2 நாட்களில் மட்டும், ரூ.517.85 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் மதுபான விற்பனை அதிகரிப்பது வழக்கமானதாக மாறி வரும் நிலையில், இந்தாண்டு விற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. திருவள்ளூர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 16, 2026 வெள்ளிக்கிழமை தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மது விற்பனையில் புதிய உச்சம்
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, ஜனவரி 14, 2026 அன்று ரூ.184.05 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 15ஆம் தேதி ரூ.251.23 கோடி விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த இரு நாட்களிலும், டாஸ்மாக் கடைகள் மூலம் மட்டும் ரூ.435 கோடியைத் தாண்டி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இதனுடன், டாஸ்மாக் நிர்வகிக்கும் பார்களிலும் கணிசமான அளவு விற்பனை பதிவாகியுள்ளது. மேலும், ஜனவரி 14, 2026 அன்று ரூ.33.16 கோடி, ஜனவரி 15. 2026 அன்று ரூ.49.43 கோடி என, 2 நாட்களில் மட்டும் பார்கள் வழியாக ரூ.82 கோடியைத் தாண்டி மது விற்பனை நடைபெற்றுள்ளது.




இதையும் படிக்க : தொடர் விடுமுறை.. மாதவரம், மணலி ஏரிகளுக்கு படையெடுத்த மக்கள்.. படகு சவாரி கட்டணம் குறைப்பு!!
சென்னையை மையமாகக் கொண்ட 2 டாஸ்மாக் மண்டலங்களில் மட்டும், இந்த 2 நாட்களில் ரூ.98 கோடிக்கு மேல் மது விற்பனை நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நகர்ப்புறங்களில் பொங்கலை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது இந்த விற்பனை அதிகரிப்பதற்கு காரணம் என கூறப்படுகிறது. பொங்கல் விடுமுறையில் நண்பர்கள், உறவினர்கள் சந்திப்பின்போது மது தவிர்க்க முடியாததாக மாறிவருவதாக கூறப்படுகிறது.
நயினார் நாகேந்திரன் கண்டனம்
உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் ஊருக்கே ஊற்றிக் கொடுத்துள்ளது @arivalayam அரசு!
“போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்” என உருகி உருகி காணொளி வெளியிட்ட முதல்வர் திரு. @mkstalin அவர்களின் ஆட்சியில், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் சுமார் ரூ. 518 கோடிக்கும் அதிகமாக மது விற்பனை… pic.twitter.com/2JRYtnQ7AA
— Nainar Nagenthran (@NainarBJP) January 17, 2026
இதையும் படிக்க : சென்னை உலா பேருந்து சேவை…இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது…என்னென்ன அம்சங்கள் உள்ளன!
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது பதிவில், போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என உருகி உருகி காணொளி வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் சுமார் ரூ. 518 கோடிக்கும் அதிகமாக மது விற்பனை களைகட்டியிருப்பது சுவாரஸ்யமான நகை முரண். குறிப்பாக பொங்கல் பண்டிகைக்கு ரூ. 3000 கொடுக்கிறோம் என ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துவிட்டு, அந்தப் பணத்தை டாஸ்மாக் வாயிலாக வசூலித்துள்ள திமுக அரசின் அறிவாற்றலைப் பார்க்கையில், இதற்குப் பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே என்ற நகைச்சுவை வசனம் தான் நினைவிற்கு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மதுபான விற்பனை அதிகரிப்பது, குடும்பத்தில் பிரச்னை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, சாலை விபத்துகள் போன்ற தீவிர பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதனால், எதிர்காலத்தில் மதுபான விற்பனையை கட்டுப்படுத்த வேண்டுமா, அல்லது சமூக பொறுப்புடன் நிர்வகிக்க வேண்டுமா என்ற விவாதம் தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.