கரூர் சம்பவம்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும் த.வெ.க தலைவர் விஜய்..
TVK Leader Vijay: ஜனவரி 12ஆம் தேதி விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஆஜரானார். அவரிடம் சுமார் ஆறு மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பல கோணங்களில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. விஜயின் பதில்களை எழுத்துப்பூர்வமாகவும், குரல் பதிவாகவும் சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.
டெல்லி, ஜனவரி 19, 2026: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்று இரண்டாவது முறையாக நேரில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். இதற்காக, நேற்று மாலை அவர் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த 2025ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்டம் தோறும் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, கரூர் மாவட்டத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரக் கூட்டத்தில் அதிகளவில் பொதுமக்கள் திரண்டிருந்தனர். வேலுசாமிபுரத்தில் விஜய் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கரூர் கூட்ட நெரிசல்:
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 41 பேர் உயிரிழந்தனர். இதில் குழந்தைகளும் அடங்குவர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, காவல்துறை தரப்பில் பல்வேறு கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அதே சமயம், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் விசாரணைக் குழுவும் தமிழக அரசு தரப்பில் அமைக்கப்பட்டது. ஆனால், இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
மேலும் படிக்க: முடிந்தது விடுமுறை.. 20 கி.மீ வரை அணிவகுத்து நின்ற வாகனங்கள்.. ஸ்தம்பித்த சென்னை..
பல்வேறு கட்ட ஆலோசனையில் சிபிஐ அதிகாரிகள்:
இதனைத் தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில் நிகழ்ச்சி நடைபெற்ற இடம், விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட பேருந்து, அதன் ஓட்டுநர், மேலும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு சிபிஐ விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
மேலும் படிக்க: நிறைவடைந்த SIR பணிகள்.. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13 லட்சம் பேர் விண்ணப்பம்..
சிபிஐ அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் ஆஜர்:
இதனைத் தொடர்ந்து, ஜனவரி 12ஆம் தேதி விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஆஜரானார். அவரிடம் சுமார் ஆறு மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பல கோணங்களில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. விஜயின் பதில்களை எழுத்துப்பூர்வமாகவும், குரல் பதிவாகவும் சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.
இந்த விசாரணை அடுத்த நாளும் தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு விசாரணை ஜனவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மீண்டும் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுவதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்றும் அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.