Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முடிந்தது விடுமுறை.. 20 கி.மீ வரை அணிவகுத்து நின்ற வாகனங்கள்.. ஸ்தம்பித்த சென்னை..

Chennai Traffic Congestion: பல லட்சம் மக்கள் ஒரே நேரத்தில் சென்னை திரும்பியதால், சென்னை – செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில இடங்களில் வாகனங்கள் மணிக்கு 5 முதல் 10 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே நகர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிந்தது விடுமுறை.. 20 கி.மீ வரை அணிவகுத்து நின்ற வாகனங்கள்.. ஸ்தம்பித்த சென்னை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 Jan 2026 07:50 AM IST

சென்னை, ஜனவரி 19, 2026: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் தற்போது சென்னை திரும்பும் நிலையில், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டது. பொங்கல் விடுமுறையாக ஜனவரி 14ஆம் தேதி போகி அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜனவரி 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை மொத்தமாக ஐந்து நாட்கள் பொங்கல் விடுமுறை வழங்கப்பட்டது.

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்:

இந்த சூழலில், ஜனவரி 19ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் வழக்கம் போல செயல்பட உள்ளதால், பொதுமக்கள் அனைவரும் சொந்த ஊர்களிலிருந்து சென்னைக்கு திரும்பி வருகின்றனர். பலரும் போக்குவரத்து நெரிசலை முன்கணித்து ஜனவரி 17ஆம் தேதி மாலை மற்றும் இரவு நேரத்திலேயே சென்னைக்கு திரும்பிய நிலையில், ஏராளமான மக்கள் ஜனவரி 18ஆம் தேதி சொந்த ஊர்களிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வருகை தருகின்றனர்.

கடுமையான போக்குவரத்து நெரிசல் – ஸ்தம்பித்த சென்னை:

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குறைந்தது 10 லட்சம் பேர் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்வார்கள். அந்த வகையில், இந்த ஆண்டும் கிட்டத்தட்ட 13 லட்சத்திற்கும் அதிகமானோர் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றதாக மதிப்பிடப்படுகிறது. விடுமுறை முடிந்து அனைவரும் நேற்று மாலை முதல் சென்னை திரும்பும் நிலையில், முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்களில் 3 முதல் 5 கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

மேலும் படிக்க: அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை.. அதிகாலையில் நிலவும் பனிமூட்டம் – வானிலை ரிப்போர்ட்..

அதிக நெரிசல் ஏற்படாத வகையில், பரநூர், சென்னை சமுத்திரம், ஸ்ரீபெரும்புதூர், நெமிலி உள்ளிட்ட டோல்கேட்களில் தற்காலிகமாக கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 8,000 முதல் 10,000 வாகனங்கள் தடையின்றி கடந்து செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இருப்பினும், பல லட்சம் மக்கள் ஒரே நேரத்தில் சென்னை திரும்பியதால், சென்னை – செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில இடங்களில் வாகனங்கள் மணிக்கு 5 முதல் 10 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே நகர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்:

இதன் ஒருபுறம், தாம்பரம் ரயில் நிலையத்திலும் அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மற்றும் கூடுதல் பெட்டிகள் மூலம் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னைக்கு வந்தடைந்தனர். அதிகாலை முதல் தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: இந்த 7 மொழி இலக்கியங்களுக்கு செம்மொழி இலக்கிய விருது – முதல்வர் அறிவிப்பு

அதேபோல், கிளாம்பாக்கம், கோயம்பேடு, தாம்பரம் பேருந்து நிலையங்களில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. ஒரு நாளில் மட்டும் 1,500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று இரவு முதல் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையில் உள்ளன. அதேபோல், சென்னை புறநகர் பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் திணறலை எதிர்கொண்டு வருகின்றனர்.