திமுக- காங்கிரஸ் உறவு முற்றிலும் முறிவு? ராகுல்காந்தி அழைப்பை ஏற்க மறுத்த மு.க.ஸ்டாலின்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
M.K.Stalin Declined Rahul Gandhi : சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க ராகுல் காந்தி விடுத்த செல்போன் அழைப்பை திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது திமுக-காங்கிரஸ் கூட்டணி முற்றிலும் முறிந்ததாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியின் செல்போன் அழைப்பை தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் ஏற்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அரசியல் களத்தில் பேசும் பொருளாகி உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வந்தது. இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி திமுக கூட்டணியில் இருந்து விலகி வெற்றிக் கழக கூட்டணியில் இணைந்தது காங்கிரஸ். இது, திமுக- காங்கிரஸ் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அது முதல் காங்கிரஸ் மீதான திமுகவின் பார்வை சற்று வேறாக மாறியது. இந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
ராகுல் காந்தி அழைப்பை ஏற்க மறுத்த மு.க.ஸ்டாலின்
இந்த விழாவில், திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அழைப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த செல்போன் அழைப்பை மு. க. ஸ்டாலின் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டமன்ற தேர்தலின்போது, திமுக- காங்கிரஸ் இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக ராகுல் காந்தியிடம், மு. க. ஸ்டாலின் பேச விரும்பவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. அதாவது, ராகுல் காந்தியின் அலுவலகத்தில் இருந்து ஸ்டாலினுக்கு தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது. இதில், சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியிட்டு விழா நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: திருச்செந்தூர் பாடல் சர்ச்சை! யாரை யாருடன் ஒப்பிடுவது.. வேல்முருகன் பண்ணது அநியாயம்.. கொந்தளித்த பெண் முருக பக்தர்!
ராகுல் காந்தியிடம் பேச மறுத்த மு.க.ஸ்டாலின்
இந்த விழாவில் பங்கேற்பதற்காக உங்களுக்கு அழைப்பு விடுக்க ராகுல் காந்தி விரும்புவதாகவும், இது தொடர்பாக அவர் பேச விரும்புவதாகவும் மு. க. ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் தமிழகத்தில் வேறு நிகழ்ச்சிகள் இருப்பதால், ராகுல் காந்தியிடம் பேச முடியாது என்று மு. க. ஸ்டாலின் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அத்துடன், சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக மு. க. ஸ்டாலின் கூறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
திமுக- காங்கிரஸ் கூட்டணி முற்றிலும் முறிவு
ஏற்கனவே, சட்டசபை தேர்தல் நேரத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் எனவும், கூடுதல் தொகுதிகள் வேண்டும் எனவும் திமுக தலைமைக்கு, காங்கிரஸ் நெருக்கடி கொடுத்தது. இதனால், அதிருப்தி அடைந்த திமுக தலைமை, ராகுல் காந்தியின் பிரச்சார வருகையின்போது, அவரை மு. க. ஸ்டாலின் சந்திக்காமல் தவிர்த்திருந்தார். இந்த நிலையில், அவருடன், ஸ்டாலின் பேச மறுத்தது திமுக- காங்கிரஸ் கூட்டணி முழுமையாக முடிவுக்கு வந்ததை வெளிக்கொணர்வதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க: மக்கள் வரிப்பணத்தில் டெல்லி பயணமா? தவெக ஆட்சியில் தமிழகத்துக்கு பெரும் ஆபத்து.. திமுக விடுத்த எச்சரிக்கை!