AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

‘கருப்பு’ பட பாணியில் சோக சம்பவம்.. திருடு போன நகையை மீட்க ஓராண்டாக போராடும் ஏழைப் பெண்!

Kanyakumari gold theft: குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த பவுன் நகைகளை பக்கத்து வீட்டுப் பெண் திருடிச் சென்ற நிலையில், திருடியவரைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தும் ஓராண்டாக நகையை மீட்க முடியாமல் ஏழைப் பெண் ஒருவர் கண்ணீருடன் போராடி வருகிறார். காவல்துறையின் மெத்தனப்போக்கால் தற்கொலை முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அப்பெண் வேதனை தெரிவித்துள்ளார்.

‘கருப்பு’ பட பாணியில் சோக சம்பவம்.. திருடு போன நகையை மீட்க ஓராண்டாக போராடும் ஏழைப் பெண்!
காவல் நிலையம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 14 Aug 2026 08:51 AM IST

கன்னியாகுமரி, ஆகஸ்ட் 14: சமீபத்தில் வெளிவந்த ‘கருப்பு’ திரைப்படத்தில் கதாநாயகி தனது நகையைப் பறிகொடுத்துவிட்டு அதை மீட்க அதிகாரிகளிடமும் காவல்துறையிடமும் போராடும் கதைக் களத்தைப் போல, நிஜ வாழ்க்கையிலும் ஒரு சோகச் சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. தன் வாழ்நாள் முழுதும் சிறுகச் சிறுகச் சேர்த்த நகைகளையும், திருமணத்தின் போது பெற்றோர் அளித்த நகைகளையும் பக்கத்து வீட்டுப் பெண் திருடிச் சென்ற நிலையில், குற்றவாளியைப் பிடித்துக் கொடுத்தும் ஓராண்டிற்கு மேலாகத் தன் நகையை மீட்க முடியாமல் ஏழைப் பெண் ஒருவர் அதிகாரிகளின் கதவுகளைத் தட்டி கண்ணீருடன் போராடி வருகிறார்.

இதையும் படிக்க: சொத்து வரி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.. சென்னை மாநகராட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

ஏழ்மைச் சூழலும் நடந்த திருட்டுச் சம்பவமும்:

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அடுத்த கற்காடு பகுதியைச் சேர்ந்தவர் 49 வயதான சைலஜா. இவரது கணவர் நீலகண்டன் உடல்நலம் பாதிக்கப்பட்டு பக்கவாத நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் குடும்ப வாழ்வாதாரத்திற்காகச் சைலஜா தனது வீட்டில் தினமும் வடைகள் மற்றும் பலகாரங்களைச் சுட்டு, அதைத் தெருத் தெருவாகச் சென்று விற்று வரும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், தனது திருமணத்தின் போது பெற்றோர் கொடுத்த நகைகள் மற்றும் வடை விற்றுச் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தில் வாங்கிய நகைகள் எனத் தனது வீட்டின் பீரோவில் பத்திரமாக வைத்திருந்துள்ளார். கடந்த ஆண்டு சைலஜா வடை விற்கச் சென்ற நேரத்தில், அவரது கணவர் மட்டும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததைச் சாதகமாகப் பயன்படுத்தி, பக்கத்து வீட்டில் வசிக்கும் பத்மா (42) என்ற பெண் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த நகைகளைத் திருடிச் சென்றுள்ளார்.

குற்றவாளியைப் பிடித்துக் கொடுத்தும் பலனில்லை:

உறவினர் வீட்டுச் சுப நிகழ்ச்சிக்குச் செல்வதற்காகச் சைலஜா பீரோவைத் திறந்தபோது நகைகள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்ததில் பத்மா வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. உடனடியாக பத்மாவைப் பிடித்து விசாரித்தபோது, அவரே நகைகளைத் திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து, சைலஜா சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து பத்மாவைக் காவல்துறையிடம் ஒப்படைத்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி பத்மா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காவல் நிலையத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் திருடிய நகைகளைத் திருப்பித் தருவதாக பத்மா உறுதியளித்துள்ளார். ஆனால், அவர் தப்பிச் சென்றுவிடுவார் என்பதால் அவரை உடனடியாகக் கைது செய்யுமாறு சைலஜா கோரிக்கை விடுத்தும், சுசீந்திரம் போலீசார் பத்மாவைக் கைது செய்யாமல் விட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: வேலூர் அருகே கொடூரம்.. பணி முடிந்து திரும்பிய பெண் தலைமை காவலர் கத்தியால் குத்திப் படுகொலை!

காவல்துறையின் மெத்தனப் போக்கு:

தற்போது பத்மா தலைமறைவாகிவிட்ட நிலையில், ஓராண்டுக்கும் மேலாக சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு அலைந்து திரிந்தும் “விசாரணை நடைபெறுகிறது” என்று ஒரே வார்த்தையைச் சொல்லி போலீசார் அலட்சியம் காட்டி வருவதாகச் சைலஜா வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வடை விற்று வாழ்க்கையை நடத்தி வரும் தமக்கு, நகைகள் மீட்கப்படாவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். ஓராண்டாக அலைக்கழிக்கும் சுசீந்திரம் போலீசார், நகைகளை விரைந்து மீட்டுத் தர உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Follow Us