விஜய் மீது பொறாமையா? ஸ்டாலின் சந்திப்பு ஏன்? விளக்கம் அளித்த ரஜினிகாந்த்!
எனக்கும் விஜய்க்கும் ஒரு தலைமுறை இடைவெளி உள்ளது. கிட்டதட்ட 25 வயது வித்தியாசம் உள்ளது. நான் முதலிலேயே கூறியுள்ளேன். நான் விஜய்யுடன் ஒப்பீடு செய்துகொண்டால், அது எனக்கு நல்லதல்ல, விஜய் என்னுடன் ஒப்பீடு செய்துகொண்டால் அது அவருக்கு நல்லதல்ல என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
நான் அரசியலிலேயே இல்லை, பிறகு நான் ஏன் விஜய் மீது பொறாமைப்பட வேண்டும்? ஒருவேளை கமல் முதல்வராகி இருந்தால் பொறாமை ஏற்பட்டிருக்குமோ என்னவோ? என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தேர்தல் முடிவுகள் வந்த பிறகு என்னைப் பற்றி சில வதந்திகள் பரவி வருகின்றன. அதற்கு நான் விளக்கம் கொடுக்கவில்லை என்றால் சரியாக இருக்காது. அதற்காகவே, இந்த செய்தியாளர்கள் சந்திப்பு என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களும்.. திமுகவின் தேர்தல் சறுக்கல்களும்.. முழு விவரம்
ஸ்டாலின் தோல்வியை ஏற்க முடியவில்லை:
முதலில் தேர்தல் முடிவுகள் வந்ததும், திமுக தலைவர் ஸ்டாலினை நான் சந்தித்ததற்கு விமர்சனங்கள் எழுந்தன. ஸ்டாலின் என்னுடைய 40 ஆண்டுகால நண்பர். எங்களுடைய நட்பு, அரசியல், கொள்கைகளுக்கு அப்பாற்பட்டது. ஜனநாயகத்தில் தோல்வியும், வெற்றியும் சகஜம். இருந்தாலும், ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி பெற்றது, எனக்கு சங்கடமாக இருந்தது. அதற்காக நான் நண்பன் என்ற முறையில், நட்பு முறையில் அவரை நேரில் சென்று சந்தித்தேன்.
விஜய்யை முதல்வராக விடாமல் தடுத்தேனா?
அதற்காக, நான் விஜய் முதல்வராக்கூடாது, அதனை தடுப்பதற்காகவே ரஜினி ஸ்டாலினை சந்தித்துள்ளார். வேறு இரண்டு பெரும் கட்சிகளை இணையுமாறு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் விமர்சனங்கள் வருகின்றன. அந்த சூழ்நிலையில் அப்படியெல்லாம் பேச முடியுமா?. அப்படி பேசும் அளவுக்கு தரம்கெட்டவன் ரஜினிகாந்த் கிடையாது. அதனை இங்கு தெளிப்படுத்திக்கொள்கிறேன்.
விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லையா?
அடுத்து, சென்னை விமான நிலையத்தில் நான் விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்படுகிறன்றன. விஜய் வெற்றி பெற்றதுமே எக்ஸ் பக்கத்தில், என்னுடைய வாழ்த்துகளை அவருக்கு பதிவு செய்துவிட்டேன். 2016ல் அரசியலுக்கு வரேன் என்று சொன்னபோது, ஊடகத்தினரை விமான நிலையத்தில் சந்திப்பது வழக்கம். அவ்வாறே, அன்று பெங்களூர் சென்றபோது ஊடகத்தினர் இருக்கிறீர்களா? என்றேன். யாரும் இல்லை என்றனர்.
சிரித்துக்கொண்டே சென்றுவிட்டேன்:
அப்போது, ஒரு இளைஞர் ஒரு போனை வைத்துக்கொண்டு விஜய் முதல்வராகியுள்ளார் என்று கேட்டார். அவரை பார்த்தால் ஊடகத்தை சேர்ந்தவர் போல் தெரியவில்லை என்பதால், நான் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டேன். அதற்கு விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று விமர்சனங்கள் என் மீது வைக்கப்படுகின்றன.
எனக்கு ஏன் விஜய் மீது பொறாமை?
அதோடு, விஜய் மீது எனக்கு பொறாமை என்றும் விமர்சிக்கின்றனர். நான் அரசியலில் இல்லை, அப்படி அரசியலில் இல்லாதபோது எனக்கு ஏன் அவர் மீது பொறாமை? ஒருவேளை கமல்ஹாசன் முதல்வராகி இருந்தால் எனக்கு பொறாமை வந்திருக்குமோ, என்னவோ தெரியவில்லை. அப்போது கூட வந்திருக்காது. கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காம இருக்கிறது கிடைக்காது.
ஆச்சர்யம் கலந்த சந்தோஷம் தான்:
எனக்கும் விஜய்க்கும் ஒரு தலைமுறை இடைவெளி உள்ளது. கிட்டதட்ட 25 வயது வித்தியாசம் உள்ளது. நான் முதலிலேயே கூறியுள்ளேன். நான் விஜய்யுடன் ஒப்பீடு செய்துகொண்டால், அது எனக்கு நல்லதல்ல, விஜய் என்னுடன் ஒப்பீடு செய்துகொண்டால் அது அவருக்கு நல்லதல்ல. சின்ன வயதில் இருந்து விஜய்யை பார்த்து வருகிறேன். அவர் முதல்வர் ஆனதில் எனக்கு என்ன பொறாமை? இவ்வளவு சின்ன வயதில் எம்ஜிஆர், என்டிஆர் சாதனைகளை விட, பெரும் சாதனை. மத்தியில் பலமான பாஜக, இங்கு இரண்டு பெரும் கட்சிகளை எதிர்த்து தனி ஆளாக சினிமா துறையில் இருந்து வந்து வெற்றி பெற்றுள்ளார். அதில் எனக்கு பொறாமை இல்லை, ஆச்சர்யம் கலந்த சந்தோஷம் தான்.
மேலும் படிக்க: தவெக அமைச்சரவையில் விசிக எண்ட்ரி?.. எதிர்பாராத திருப்பம்?.. சஸ்பென்ஸ் வைக்கும் தலைமை!
2 ஆண்டுகளுக்கு விஜய்யை தொல்லை செய்யக்கூடாது:
விஜய் மீது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. நிச்சயம் அவர் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அவர் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். விஜய்யை இரண்டு ஆண்டுகளுக்கு எதுவும் தொல்லை செய்யக் கூடாது, அவருக்கு அவகாசம் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.